அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக எம்எல்ஏ மீது வழக்குப் பதிந்து கைது செய்திடுக! -ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Dec 11, 2023, 11:16 AM IST

மழைக்காலத்தில் குறைகேட்க வராதது ஏன்? எனக்கேட்டதற்காக அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்துவதா? திமுக எம்எல்ஏ எபினேசர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


சென்னை வெள்ள பாதிப்பு

வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்ட மக்களை தாக்கிய திமுக எம்எல்ஏவை கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில், மழை வெள்ளத்தால்  தாங்கள் பாதிக்கப்பட்டிருந்த போது,

Latest Videos

undefined

குறைகளை கேட்க வராதது ஏன்? என்று வினா எழுப்பிய பொதுமக்களை  இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரும்,  அவரது ஆதரவாளர்களும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இத்தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளனர். ஒருவர் மண்டை உடைந்து ரத்தக்காயங்களுடன் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். 

மக்களை தாக்கிய எம்எல்ஏ

சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்களின் அத்துமீறலும், தாக்குதலும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மிக்ஜாம் புயல் மழையால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள் வட சென்னை மக்கள் தான். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக சகித்துக்கொள்ள முடியாத சூழலில் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மழை நீரும், கழிவு நீரும் சூழந்த நிலையில் அவர்கள் தவித்துக் கொண்டிருந்த போது, ‘ உடுக்கை இழந்தவன் கை போல’ சட்டப்பேரவை உறுப்பினரும், பிற மக்கள் பிரதிநிதிகளும் அங்கு சென்று மக்களின் இடுக்கண் கலைந்திருக்க வேண்டும்.  ஆனால், அவர்கள் எவரும் மக்களை எட்டிக்கூட பார்க்கவில்லை. அதற்கு மாறாக, நிவாரண உதவி டோக்கன்களை வழங்குவதற்காக சட்டப்பேரவை உறுப்பினர் வந்த போது, ’’துயரத்தின் போது வராத நீங்கள், இப்போது வருவது ஏன்?” என்று மக்கள் வினா எழுப்பியிருக்கின்றனர். அவர்களின் எதிர்ப்பும், கோபமும் நியாயமானது தான்.

எம்எல்ஏவை கைது செய்திடுக

பாதிக்கப்பட்ட மக்களின் கோபத்தை புரிந்து கொண்டு அவர்களை அமைதிப்படுத்த சட்டப்பேரவை உறுப்பினர் முயன்றிருக்க வேண்டும். மாறாக,  தமக்கு வாக்களித்து சட்டப்பேரவை உறுப்பினராக்கிய மக்கள் மீதே தாக்குதல் நடத்தியிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுமக்களைத் தாக்கிய சட்டப்பேரவை உறுப்பினர் எபினேசரையும்,  அவரது ஆதரவாளர்களையும் கைது செய்ய வேண்டும். தாக்குதலில் காயமடைந்த மக்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும் என ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பு..! இன்று ஆய்வை தொடங்கும் மத்திய குழு- எப்போது அறிக்கை தாக்கல் செய்யும் .?

click me!