தயிருக்கு தாஹி என பெயரிட கட்டாயப் படுத்துவதா? மத்திய அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Mar 29, 2023, 1:15 PM IST

ஆவின் நிறுவனத்தின் தயிர் உறைகளில் தயிர் என்ற சொல் மட்டுமே பயன்படுத்தப் படுவதை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள ராமதாஸ் தாஹி என்ற இந்தி சொல்லை பயன்படுத்த கட்டாயப்படுத்தக்கூடாது என வலியுறுத்தியுள்ளார்.


தயிருக்கு தாஹி

தயிருக்கு தாஹி என பெயரிட மத்திய அரசு கட்டாயப்படுத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவின் நிறுவனம் விற்பனை செய்யும் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது என்றும், தாஹி என்ற இந்திச் சொல்லைத் தான் எழுத வேண்டும் என்றும் இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் கட்டுப்பாடு விதித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியளிக்கின்றன. நடுவண் அரசின் இந்த மறைமுகமான இந்தித் திணிப்பு கண்டிக்கத்தக்கது; இதை ஏற்க முடியாது. இந்தியாவில் உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 

Latest Videos

கன்னட மொழி அமைப்புகள் கண்டனம்

உணவுப் பொருட்களை உறையில் அடைத்து விற்பனை செய்யும் நிறுவனங்கள், அதற்காக உணவுப் பாதுகாப்பு தர ஆணையத்தின் ஒப்புதலை பெற வேண்டும். இந்த அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு தான் மாநில மொழிச் சொற்களுக்கு மாற்றாக இந்தி சொற்களை பயன்படுத்த வேண்டும் என்று தர ஆணையம் கட்டாயப்படுத்துகிறது. தமிழ்நாட்டின் ஆவின், கர்நாடகத்தின் நந்தினி, கேரளத்தின் மில்மா உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகளுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் தயிர் உறைகளின் மீது தயிர் என்று எழுதக்கூடாது; மாறாக தாஹி என்ற இந்திச் சொல்லை பெரிய எழுத்திலும், அதைத் தொடர்ந்து அடைப்புக்குறிக்குள் மாநில மொழிச் சொல்லையும் எழுத வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இதற்கு கர்நாடகத்தில் உள்ள கன்னட மொழி அமைப்புகள் கண்டனம்  தெரிவித்துள்ளன. தமிழக அரசு இந்த சிக்கலில் என்ன நிலைப்பாடு எடுத்துள்ளது எனத் தெரியவில்லை.

இந்தியை திணிக்க முயற்சி

கடந்த நவம்பர் மாதம் திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த சேவை மையம் என்ற பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, சகயோக் என்ற இந்தி சொல் தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. அதை நான் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து அகற்றப்பட்டது.இந்தியை இந்தியாகவே திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்பதால், இந்தி சொற்களை தமிழில் எழுதி திணிக்க நடுவண் அரசு முயற்சிப்பதாகவே இதை பார்க்க வேண்டியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள், வானொலிகள், பண்பாடு சார்ந்த நிகழ்ச்சிகள் ஆகியவை  வழியாக இந்தியைத் திணிக்க முயன்று வரும் மத்திய அரசு, இப்போது தமிழ்நாடு அரசின் நிறுவனமான ஆவின் மூலமாகவே இந்தியைத் திணிக்கத் துடிப்பதை எந்த வகையிலும் ஏற்க முடியாது.

ஆவின் பணியக்கூடாது

எந்த வழிகளில் இந்தியைத் திணிக்க நடுவண் அரசு முயன்றாலும் அதை தமிழ் மக்கள் முறியடிப்பார்கள். இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையம் என்பது உணவுப் பொருட்களின் தரத்தையும், பாதுகாப்பையும் கண்காணிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே தவிர, இந்தியைத் திணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல என்பதை அந்த அமைப்பின் பொறுப்பாளர்களும், அதை இயக்குபவர்களும் உணர வேண்டும். இது தொடர்பான எந்த நெருக்கடிக்கும் ஆவின் நிறுவனம் பணியக்கூடாது; மறைமுகமாக இந்தியை திணிக்கும் செயலுக்கு துணை போகக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

முதுகில் குத்தும் துரோக கூட்டம்.. இறைவனின் தீர்ப்பே இறுதி தீர்ப்பு.. ஓபிஎஸ் மகன் உருக்கமான பதிவு..!

click me!