மேகதாது அணைக்கு அனுமதி..? கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பேச்சு ஆபத்தானது - சீறும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published Sep 12, 2023, 2:10 PM IST

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லைக்குள் தான் உள்ளது என்பதால் அதை தமிழ்நாடு எதிர்க்கக் கூடாது; மத்திய அரசு மறுகேள்வி கேட்காமல் அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா கூறியிருப்பதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,  கர்நாடக மாநிலம் மைசூருவில் செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமய்யா,‘‘மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடக எல்லையில் தான் உள்ளது.

அதை தமிழ்நாடு எதிர்க்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், தமிழ்நாடு தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்த பிறகும் கூட, அதற்கு அனுமதி அளிப்பதற்கு மத்திய முன்வரவில்லை’’ என்று கூறியிருக்கிறார். 

Tap to resize

Latest Videos

பலமுறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும், பதவி வகித்தவரும், இரண்டாவது முறை முதலமைச்சராக பதவி வகிப்பவருமான சித்தராமய்யா, இந்திய அரசியலமைப்பு சட்டம், கூட்டாட்சி தத்துவம், இரு மாநில நீர்ப்பகிர்வு உடன்பாடு ஆகியவற்றின் அடிப்படை கூட தெரியாமல் தமிழ்நாட்டிற்கு எதிராக கருத்துத் தெரிவித்திருப்பது தவறு; இது கண்டிக்கத்தக்கது. மேகதாது அணை கட்டப்படும் பகுதி கர்நாடகத்தில் இருப்பதால், அதுபற்றி தமிழ்நாடு கேள்வி எழுப்பக் கூடாது என்பது அறியாமையின் உச்சம் ஆகும். தமிழ்நாடும், கர்நாடகமும் இந்தியா என்ற நாட்டின் இரு மாநிலங்கள் தானே தவிர, இரு தனித்தனி நாடுகள் அல்ல. எனவே, கர்நாடகம் அதன் விருப்பம் போல செயல்பட முடியாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு தான் செயல்பட முடியும்.

ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கு பாயும் ஆறுகளில் கூட முதல்மடை பாசனப் பகுதி நாடு  விருப்பம் போல அணைக் கட்டுக்கொள்ள முடியாது. அதற்கான பன்னாட்டு ஒப்பந்தங்களை மதிக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் போது இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான கர்நாடகம், காவிரி நீர்  சிக்கலில் கடைமடை பாசனப் பகுதியான தமிழகத்தின் உரிமைகளை புறக்கணித்து விட்டு செயல்படமுடியாது.

 இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் அவற்றின் தேவைக்காக மற்ற மாநிலங்களை சார்ந்தே உள்ளன.  தமிழகத்தில் கல்பாக்கம், நெய்வேலி, கூடங்குளம் உள்ளிட்ட இடங்களில் உற்பத்தி செய்யப்படும்  மின்சாரம் பல மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. சித்தராமய்யாவின் அணுகுமுறையை பிற மாநிலங்களும் கடைபிடிக்கத் தொடங்கினால், அது இந்தியாவின் ஒற்றுமைக்கே ஆபத்தாக மாறிவிடும். கர்நாடகம் காவிரியில் தோன்றினாலும் அதில் கை வைத்து தடுக்க கர்நாடகத்திற்கு அதிகாரமில்லை.

காவிரியில் தமிழ்நாட்டிற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்றால், மேகதாது அணையை கட்டுவது தான் ஒரே வழி என்று சித்தராமய்யா கூறுவதும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் செயலாகும். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் இப்போது கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவு 115 டி.எம்.சி ஆகும்.  அந்த அணைகள் அனைத்தும் நிரம்பிய பிறகு வெளியேற்றப்படும் உபரி நீர் தான் தமிழகத்திற்கு கிடைக்கிறது. 70 டி.எம்.சி கொள்ளளவுள்ள மேகதாது அணை கட்டப்பட்டால், அந்த நீரும் தமிழகத்திற்கு கிடைக்காமல் போய்விடும்.

 எனவே, மேகதாது அணை கட்டுவது தமிழகத்திற்கு பெரும் தீங்காகத் தான் அமையுமே தவிர, ஒரு போதும் தீர்வாக அமையாது என்பதை தமிழக அரசு உணர வேண்டும். எனவே, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு ஒருபோதும் ஒப்புதல் அளிக்கக்கூடாது. மாறாக, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக பேசி வரும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

எங்க பகுதியில் நாங்க அணைக்கட்டுறோம்! தேவையில்லாமல் தமிழகம் தொல்லை தருகிறது! கடுகடுக்கும் முதல்வர் சித்தராமையா

click me!