தமிழகத்தில் ஆலமரமாக வேரும்,விழுதும் ஊன்றியிருக்கிறதா கள்ளச்சாராய தொடர்பு.!திமுக அரசுக்கு எதிராக சீறும் ராமதாஸ்

By Ajmal Khan  |  First Published May 15, 2023, 2:51 PM IST

கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ரமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


கள்ளச்சாரய மரணம்

கள்ளச்சாரயம் சாப்பிட்டு இரு வேறு இடங்களில் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தையடுத்த எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்திருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தையடுத்த சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையும் நான்காக உயர்ந்துள்ளது.

Latest Videos

இரு நிகழ்வுகளிலும் ஒரே வகையான கள்ளச்சாராயம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. எக்கியார்குப்பம் பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம், முழுக்க முழுக்க தொழிற்சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்படும் எரிசாராயத்தில் தண்ணீர் கலந்து தயாரிக்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது. 

கள்ளச்சாராயக் கட்டமைப்பு

சித்தாமூரில் உயிரிழந்தவர்கள் குடித்ததும் அதே வகையான கள்ளச்சாராயம் தான் என்றும், இரு இடங்களிலும் விற்கப்பட்ட கள்ளச்சாராயம் ஒரே இடத்திலிருந்து வாங்கி வரப்பட்டிருக்கலாம்  என்றும் கூறப்படுகிறது. இது உண்மையானால் அது மிகவும் கவலையளிக்கும் செய்தி ஆகும். எக்கியார்குப்பமும், சித்தாமூரும் வேறு வேறு மாவட்டங்கள். இரு இடங்களுக்கும் இடையிலான தொலைவு ஏறக்குறைய 60 கி.மீ ஆகும். இரு இடங்களுக்கும் ஒரே தரப்பிடமிருந்து மது விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றால் கள்ளச்சாராயக் கட்டமைப்பு மாவட்டங்களைக் கடந்து ஆலமரமாக வேரும், விழுதும் ஊன்றி நிற்பதாகத் தான் பொருள் ஆகும். இத்தகைய கட்டமைப்பு ஒரிரு நாட்களிலோ, மாதங்களிலோ உருவாகி இருக்க வாய்ப்பில்லை. பல ஆண்டுகளாக காவல்துறையினரின் துணையுடன் தான் உருவாகியிருக்க வேண்டும். மக்களைக் காக்க வேண்டும் என்றால், இந்த கட்டமைப்பு தகர்த்தெறியப்பட வேண்டும்.

  உடனடியாக பணியிடை நீக்கம்

கள்ளச்சாராயக் கட்டமைப்பை வேருடன் ஒழிக்க வேண்டும் என்பதில் அரசுக்கு அக்கறை இருந்தால், கீழ்க்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.  கள்ளச்சாராயம் குறித்து தகவல் தெரிவிக்க 3 இலக்க இலவச தொலைபேசி அழைப்பு எண்ணை அரசு அறிவிக்க வேண்டும்; அதன்வழியாக தகவல் தெரிவிப்போரின் அடையாளங்களை  கமுக்கமாக வைத்திருப்பதுடன், அவர்களுக்கு  வெகுமதி அளிக்க வேண்டும். கள்ளச்சாராய விற்பனையைக் கட்டுப்படுத்தத் தவறிய ஊராட்சித் தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். மதுவிலக்கு நடைமுறைப்பிரிவில் உள்ள காவலர் முதல் கண்காணிப்பாளர் நிலை வரை உள்ள  அனைவரும் ஆயுதப்படைக்கு மாற்றப்பட வேண்டும்; 

மதுவில்லா மாநிலமாக மாற்றிடுக

மதுவிலக்கு நடைமுறைப்பிரிவுக்கு கடமை உணர்வும், மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதில் உண்மையான அக்கறையும் கொண்ட இளம் அதிகாரிகள் பணியமர்த்தப்பட வேண்டும். கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். 6 மாதங்களில் விசாரித்துத் தீர்ப்பு அளிக்கப்பட வேண்டும். தீர்ப்பு வழங்கப்படும் வரை பிணையில் வெளிவரமுடியாத வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட வேண்டும். கள்ளச்சாராயக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும்  மேற்கண்ட நடவடிக்கைகளின் மூலம் கள்ளச் சாராயத்தை ஒழிப்பதுடன், அரசு மதுக்கடைகளையும் மூடுவதன் மூலம் தமிழகத்தை மதுவில்லா மாநிலமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

ஜெயலலிதா இறந்தால் தான், தான் முதலமைச்சர் ஆக முடியும் என உள் மனதில் தவமிருந்தவர் ஓபிஎஸ்.! சீறும் ஜெயக்குமார்
 

click me!