ராஜ்யசபா எம்பி தேர்தல்..! மீண்டும் அறிவாலய கதவை தட்டும் காங்..! என்ன முடிவெடுப்பார் ஸ்டாலின்?

By Selva KathirFirst Published Aug 25, 2021, 10:29 AM IST
Highlights

 தமிழகத்தில் மூன்று எம்பி பதவிகள் காலியான உடனேயே அதில் ஒரு பதவியை காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்குமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டது. ஆனால் அப்போது தேர்தல் அறிவித்த பிறகு பார்க்கலாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார்.

தமிழகத்தில் காலியாக உள்ள 3 ராஜ்யசபா எம்பி பதவிகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடைபெற்றால் ஒரு இடத்தை காங்கிரசுக்கு ஒதுக்குவது பற்றி யோசிக்கலாம் என கடந்த இரண்டுமாதங்களுக்கு முன்னரே ஸ்டாலின் கூறியிருந்த நிலையில் தற்போது மறுபடியும் அதற்கான முஸ்தீபுகள் தொடங்கியுள்ளன.

அதிமுக எம்பி முகமது ஜான் மறைவால் காலியாக உள்ள ஒரு இடத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் வைத்திலிங்கம் மற்றும் கே.பி.முனுசாமி ஆகியோர் ராஜினாமா செய்ததால் காலியாக உள்ள இரண்டு எம்பி பதவிகளுக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே இந்த மூன்று பதவிகளை முதலில் ஒரு பதவிக்கும், அடுத்த 2 பதவிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த மூன்று எம்பி பதவிகளையும் திமுக கைப்பற்றுவது உறுதியாகிவிட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் மூன்று எம்பி பதவிகள் காலியான உடனேயே அதில் ஒரு பதவியை காங்கிரஸ் தங்களுக்கு ஒதுக்குமாறு ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டது.

ஆனால் அப்போது தேர்தல் அறிவித்த பிறகு பார்க்கலாம் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு மூன்று எம்பி பதவிகளுமே திமுகவிற்கு என்றாகியுள்ள நிலையில் அவற்றில் ஒன்றை தங்களுக்கு கொடுக்குமாறு மறுபடியும் காங்கிரஸ் தரப்பில் இருந்து அறிவாலயக் கதவுகளை தட்ட ஆரம்பித்துள்ளனர். அதிலும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடந்த சில மாதங்களுக்கு முன்பே பதவிக்காலம் முடிந்து எம்பி பதவியை இழந்துவிட்டார். எனவே அவரை மறுபடியும் எம்பியாக்க ராஜ்யசபா அனுப்ப காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

ராஜஸ்தான், கேரளாவில் இருந்து மட்டுமே தற்போதையக்கு ராஜ்யசபாவிற்கு காங்கிரசால் எம்பியை அனுப்ப முடியும். ஆனால் அங்குள்ள உள்ளூர் அரசியலை மீறி வெளிமாநிலத்தை சேர்ந்த குலாம் நபி ஆசாத்தை அறிவிக்க முடியாது என்பதால் குலாம் நபியை தமிழகத்தில் இருந்து எம்பியாக்க  காங்கிரஸ் காய் நகர்த்துகிறது. ஆனால் திமுகவை பொறுத்தவரை தங்க தமிழ்ச் செல்வன், கார்த்திகேய சிவசேனாபதி, சுப்புலட்சமி ஜெகதீசன் என இரண்டு பதவிகளுக்கு ஏராளமானோர் வரிசையில் உள்ளனர்.

அதே சமயம் அடுத்த ஆண்டோடு ப.சிதம்பரத்தின் ராஜ்யசபா எம்பி பதவிக்காலம் முடிகிறது. தற்போது அவர் மராட்டியத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டுள்ளார். மறுபடியும் அவரை அங்கிருந்து ராஜ்யசபா அனுப்ப வாய்ப்பில்லை என்கிறார்கள். எனவே அடுத்த ஆண்டு தமிழகத்தில் காலியாகும் இடங்களில் ஒன்றை சிதம்பரத்திற்கு கேட்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு தங்களிடம் எம்பி பதவியை எதிர்பார்க்காதீர்கள் என்று திமுக தரப்பில் கூறுவதாகவும் ஆனால் அதனை அப்போது பார்த்துக் கொள்ளலாம் தற்போது குலாம் நபி ஆசாத்தை எம்பி ஆக்குங்கள் என்று காங்கிரஸ் சார்பில் அறிவாலயத்தில் தீவிரமாக பேச ஆரம்பித்துள்ளார்களாம்.

click me!