ராஜ்ய சபா தேர்தல்.. திமுகவில் எம்.பி. பதவியைப் பிடிக்க போட்டா போட்டி.. உதயநிதி ஆதரவைப் பெறுவதில் மும்முரம்!

By Asianet TamilFirst Published May 14, 2022, 8:37 AM IST
Highlights

திமுகவில் இதுவரை ராஜ்யசபா எம்.பி. பதவியை பெறாத சமூகத்தினருக்கு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சி மேலிடத்தில் சில திமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ராஜ்ய சபா  தேர்தல் ஜூன் 10-இல் நடைபெற உள்ள நிலையில் திமுக சார்பில் ராஜ்ய சபாவுக்கு போகப்போவது யார் என்று பேச்சு அறிவாலயத்தில் சூடுபிடித்துள்ளது.

நாடு முழுவதும் 15 மாநிலங்களில் காலியாக உள்ள ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் ஜூன் 10 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்திலும் 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. திமுகவில் ஆர்.எஸ். பாரதி, டி.வி.கே.எஸ். இளங்கோவன், ராஜேஷ்குமார் ஆகியோர் பதவிக் காலமும், அதிமுகவில் நவனீதகிருஷ்ணன், எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகியோர் பதவிக்காலமும் முடிகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணிக்கு 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 70 எம்.எல்.ஏ.க்களும், பாமகவுக்கு 5 எம்.எல்.ஏ.க்களும் இருக்கிறார்கள். தமிழகத்தில் ஒரு ராஜ்ய சபா எம்.பி.யைத் தேர்ந்தெடுக்க 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. 

இதன் அடிப்படையில் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 4 எம்.பி.க்களை உறுதியாக கைப்பற்ற முடியும். அதிமுகவால் 2 எம்.பி.க்களை கைப்பற்ற முடியும். இந்த எம்.பி. பதவிகளைப் பிடிக்க திமுக, அதிமுகவில் பலத்த போட்டி ஏற்பட்டிருக்கிறது. திமுகவில் தற்போது பதவி முடிவடையும் 3 எம்.பி.க்களில் 2 பேருக்கு மீண்டும் வழங்குவது என்று திமுக மேலிடம் முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் இருவரும் திமுகவின் மூத்த முன்னோடிகள் ஆவர். ராஜேஸ்குமாருக்கு உதயநிதி ஸ்டாலினின் ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே, மூன்று பேரில் எந்த இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

எஞ்சிய இரு எம்.பி. பதவிகளில் காங்கிரஸ் ஓரிடம் கேட்க முடிவு செய்திருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். ப. சிதம்பரத்துக்காக ஒரிடத்தை காங்கிரஸ் மேலிடம் கேட்க உத்தேசித்துள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் மே 10-இல் முடிவடைந்த நிலையில், திமுக நிர்வாகிகளை முதல்வரும் கட்சியின் தலைவருமான ஸ்டாலின் சந்தித்து பேசவில்லை. அடுத்தடுத்த நாட்களில் கட்சியின் மூத்த நிர்வாகிகளை ஸ்டாலின் சந்தித்து பேசும்போது, ராஜ்ய சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடுவெடுக்கப்படும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் திமுகவில் தங்கத்தமிழ் செல்வன், ஏ.கே.எஸ். விஜயன் உள்ளிட்டோர் எம்.பி. பதவியை எதிர்பார்த்து சிலர் காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சிக்கு ஓரிடத்தை திமுக வழங்க முன்வரவில்லையெனில் இவர்கள் உள்ளிட்ட வேறு சிலர் எம்.பி. ஆவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், திமுகவில் இதுவரை ராஜ்யசபா எம்.பி. பதவியை பெறாத சமூகத்தினருக்கு பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் கட்சி மேலிடத்தில் சில திமுக நிர்வாகிகளால் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல ராஜ்ய சபா எம்.பி. பதவியைப் பெறும் நகர்வில் ஈடுபட்டுள்ளோர் கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவைப் பெறுவதிலும் ஆர்வம் காட்டி வருவதாக அறிவாலயத்தில் பேசப்படுகிறது.

click me!