ஜெயலலிதாவை போல நல்லாட்சி தருவேன் என்று சொல்லும் சசிகலா.. ஒரே வார்த்தையில் ஓ. பன்னீர்செல்வம் சொன்ன நச் பதில்!

By Asianet TamilFirst Published May 14, 2022, 7:39 AM IST
Highlights

மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் ஏதும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டும் தானாகவே வந்து விடுகிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக 505 வாக்குறுதிகளை அளித்துதான் திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. மகளிருக்கு உதவி தொகை ஆயிரம் வழங்குவது உள்பட பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. ஆனால், திமுகவின் ஓராண்டு ஆட்சியின் முடிவில் அதுபோன்ற மக்கள் நல  திட்டங்கள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சியில் ஓராண்டு சாதனைகள் அதிகம் என்கிறார்கள். ஆனால், மக்கள் நல திட்டங்கள் மக்களுக்கு பயன் அளிக்கும் திட்டங்கள் ஏதும் திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படவில்லை. இந்த ஓராண்டு ஆட்சி காலத்தில் மக்கள் வேதனையைதான் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திமுக ஆட்சியில்  நிர்வாக சீர்கேடு உள்ளது. அதற்கு பொங்கல் பரிசு தொகுப்பு  வழங்கியதையே சிறந்த உதாரணமாகச் சொல்லலாம். அதிமுக ஆட்சியில்  பொங்கல் பரிசு தொகுப்பில் தரமான பொருட்கள் இருந்தன. தரமான பொருட்களை மக்களுக்கு வழங்கியது மட்டுமல்லாமல் பரிசு தொகுப்பும் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் தரமில்லாத பொங்கல் பொருட்களை வ்ழங்கியதோடு  பொங்கல் பரிசு தொகையும் இல்லாமல்தான் வழங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் மகளிருக்கான  திட்டங்கள் அதிகம். மாநிலத்தின் மொத்த நிதியில் 55 சதவீதம் பெண்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்காகத்தான் ஒதுக்கப்பட்டது. அடித்தட்டு மக்களும்  மேல் தட்டு மக்களுக்கு சமமாக வாழும் வகையில் அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டன.

 அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களின் கைகளுக்கு நேரடியாக சென்று சேர்ந்தது. தற்போது அதுபோன்ற சூழல் இல்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது. இங்கு ரவுடிகள் ராஜ்ஜியம்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு  எப்போதெல்லாம் வருகிறதோ அப்போதெல்லாம் மின்வெட்டும் தானாகவே வந்து விடுகிறது. எப்போது மின்சாரம் வரும் எப்போது மின்சாரம் போகும் எனத் தெரியாமல் விவசாயிகள்  மிகப்பெரிய வேதனையில் உள்ளனர். பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலைதான் விவசாயிகளுக்கு உள்ளது” என்று ஓபிஎஸ் தெரிவித்தார். 

இதனையடுத்து, ‘ஜெயலலிதாவைப் போல நல்லாட்சியைத் தருவேன்’ என்று சசிகலா சொன்னது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு ஓபிஎஸ், “வந்தால் பார்ப்போம்” எனப் பதில் அளித்தார்.

click me!