பெண்களுக்கு ரூ1000 வழங்கும் திட்டம் எப்போது அமல்.? கடும் அதிருப்தியில் பெண்கள்.. திமுக அரசுக்கு கேப்டன் அலர்ட்

By Asianet TamilFirst Published May 13, 2022, 9:40 PM IST
Highlights

பெண்களுக்கு ரூ.1000 வழங்கும் உரிமைத் தொகை திட்டம் கடந்த பொங்கலுக்கும், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து காத்து கிடந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

திமுக அரசு தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் கூறி வருகின்றன. குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தாதைக் கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் திமுக அரசை விமர்சித்து வருகின்றன. இந்நிலையில் பெண்களுக்கான உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தேமுதிக நிறுவனர் தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  

அதில், “6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15 முதல் அமலுக்கு வரும் என்று உயர்கல்வித் துறை அறிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஏழை ஏளிய மாணவிகள் பயன் அடையும் வகையில் மாதந்தோறும் ரூ. 1000 வழங்கும் திட்டத்தை தேமுதிக வரவேற்கிறது. அதேசமயம் தேர்தல் நேரத்தில் திமுக அளித்த மிக முக்கியமான வாக்குறுதிகளில் குறிப்பாக பெண்களுக்கான மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை இன்னும் செயல்படுத்தவில்லை.

இந்தத் திட்டம் கடந்த பொங்கலுக்கும், உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகும் செயல்படுத்தப்படும் என எதிர்பார்த்து காத்து கிடந்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாததால் தமிழக அரசு மீது பெண்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே பெண்களுக்கான மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அறிக்கையில் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

click me!