தமிழகத்தில் ராஜ்ய சபா இடைத்தேர்தல்... தேர்தலை நடத்த தயாராகும் தேர்தல் ஆணையம்?

By Asianet TamilFirst Published Jul 6, 2021, 9:21 AM IST
Highlights

தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. அதிமுகவின் முகமது ஜான் மறைவாலும், கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் ஆகியோர் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்கள் ஆனதாலும் இந்தக் காலி இடங்கள் ஏற்பட்டன. இந்தக் காலி இடங்களுக்கு ஒரே தேர்தல் ஆணைய நோட்டிபிகேஷனில் தேர்தல் நடந்தால், திமுகவுக்கு இரண்டு இடங்களும் அதிமுகவுக்கு ஓரிடமும் கிடைக்கும். ஆனால், இந்த பதவிகளின் காலம் வெவ்வேறு கால கட்டத்தில் முடிவதால், தனித்தனி நோட்டிபிகேஷனில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி தேர்தல் நடத்தினால், மூன்று இடங்களும் திமுகவுக்கே கிடைக்கும். இதற்காக குஜராத்தில் நடந்த தேர்தல் உதாரணத்தையும் திமுக தேர்தல் ஆணையத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தக் காலி இடங்களுக்கு தேர்தல் நடத்துவது குறித்து புதிய தகவல் வெளியாகி உள்ளது. இடைத்தேர்தல் அறிவிப்பை ஓரிரு நாளில் தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளதாக டெல்லி  தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தேர்தலில் திமுகவில் சீட்டுக்களைப் பெற சுப்புலட்சுமி ஜெகதீசன், தங்கத்தமிழ்ச் செல்வன், கார்த்திகேய சிவசேனாபதி எனப் பலருடைய பெயர்கள் அடிபடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!