
கமல் தன் அரசியல் சுற்றுப்பயணத்தை இராமநாதபுரத்திலிருந்து ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துவிட்ட நிலையில், சில வாரங்கள் அரசியல் பரபரப்புக்கு லீவு விட்டிருந்த ரஜினியின் ஃபிளைட் மீண்டும் டேக் ஆப்ஃ ஆகிறது.
அரசியலுக்கு வருவதற்கான ரஜினியின் முன்னேற்பாடுகள், முஸ்தீபுகள், திட்டங்கள், வட்டங்கள் பற்றி சில தகவல்கள் வந்துவிழுந்துள்ளன. அவை இப்படியாக வரிசை கட்டுகின்றன...
* ரஜினி கட்சிக்கு ஒரு அலுவலகம் வேண்டும், கட்சிப் பணி தொடர்பாக தனது நிர்வாகிகளை ரஜினி சந்தித்துப் பேச நிலையான ஒரு இடமும் வேண்டுமல்லவா? அதற்காக ராகவேந்திரா மண்டபத்தின் பின்பக்கம் இருந்த கெஸ்ட் ஹவுஸ் இடித்து, மாற்றப்பட்டு வருகிறது. சுமார் இருநூறு பேர் அமருமளவுக்கு மினி ஹால் ஆக மாற்றும் வேலை நடக்கிறது.
* ஆன்லைன் மூலமாக சேரும் உறுப்பினர்கள் தனியாக சேரட்டும். இது போக முகாம்களை ஆங்காங்கே நடத்தி நேரடியாக நபர்களை சேர்க்கும் பணியையும் செய்திட மன்றத்தினருக்கு உத்தரவிட்டுள்ளார் ரஜினி.
* வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் ஒரு கோடி பேராவது தனது கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டுமென்பதே ரஜினியின் உத்தரவு, விருப்பம்.
* சேர்க்கப்படும் உறுப்பினர்களின் விபரம் சென்னையிலுள்ள ஐ.டி. டீமினால் துரித கதியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, உடனடியாக உறுப்பினர் அட்டை வழங்கப்பட வேண்டும்.
* நிர்வாகிகளை ரஜினிதான் நியமிப்பார். நீண்டகால நபர், புதிய நபர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. ரைட் நபர்! ரைட் சாய்ஸ்...என்பதே இலக்கு. கட்சியின் பெயர், கொடி, தமிழகம் முழுக்க எப்போது டூர் என்பதையெல்லாம் மதுரை விழாவில் ரஜினி அறிவிப்பார்.
* சென்னையிலிருந்து தமிழகம் முழுக்க சுற்றிக் கொண்டிருக்கும் ரஜினியின் ‘செயல் திட்டமிடல் குழு’ மாவட்ட வாரியாக சென்று மன்ற நிர்வாகிகளை ஒருங்கிணைத்து, கட்சியாக மாற என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றி ஆலோசனை தந்து வருகிறது.
* உறுப்பினர் சேர்க்கிறேன் பேர்வழி என்று ரூம் போடுதல், மண்டபம் எடுத்தல் போன்ற வீண் செலவுகள் கூடவே கூடாது என்று ரஜினி உத்தரவிட்டுள்ளார். இரண்டு மூன்று தெருக்களில் உள்ளவர்களை இணைக்கையில் அந்த வீதியில் ஏதோ ஒரு வீட்டில் உட்கார்ந்து பணிகளை செய்ய வேண்டும்.
* உறுப்பினராக இணையும் பெண்கள், தங்களின் புகைப்படங்களையும், மொபைல் எண்ணையும் தர தயங்கினால் வர்புறுத்த வேண்டாம் என்று உத்தரவு.
- இதெல்லாம் திட்டமிட்டபடி பக்காவாக நடந்துவிட்டால், தான் நினைத்தவாறு ஒரு கோடி உறுப்பினர்கள் கட்சியில் இணைந்துவிடுவார்கள். பின் அட்டகாசமாக கட்சியை துவக்கி தூள் பண்ணலாம் என்பதே பாட்ஷாவின் பலே கணக்கு!
பிளானெல்லாம் ஓ.கே.தான். ஆனா அது நிறைவேறணுமே!