
இன்றைய தேதிக்கு தமிழக அமைச்சரவைக்கு வேப்பங்காயாக இருப்பது ரஜினி மற்றும் கமல் இருவரும்தான். ஸ்டாலின் எனும் ஒரு எதிரியை மட்டுமே எதிர்த்துக் கொண்டு ஆட்சியை ஓட்டிக் கொண்டிருந்த இவர்களின் முன்னால் இப்போது கமல் - ரஜினி இருவரும் மிகப் பிரம்மாண்டமான சவால்களாக எழுந்து நிற்கிறார்கள்.
இந்நிலையில் இந்த இரு நபர்களையும் ஒரே மேடையில் சந்திப்பதோடு, அவர்கள் ஆட்சிக்கு எதிராக ஏதாவது கருத்தைக் கூறி காயம் செய்துவிடுவார்களோ! என்று அமைச்சர்கள் அரண்ட கதை நடந்திருக்கிறது.
எம்.ஜி.ஆர். நடித்து ஆனால் முடிக்க முடியாமல் போன ‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜூ’ எனும் படம் இப்போது அனிமேஷனில் தயாராகிறது. பிரபுதேவாவுடன், ஐசரி கணேஷ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் துவக்க விழாவில் பல முக்கிய தலைகள் கலந்து கொண்டன. ரஜினியும், கமலும் பிரதானமாக வந்திருந்தனர்.
இந்த நிலையில் விழாவுக்கு உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, டாக்டர் விஜயபாஸ்கர் மற்றும் பாலகிருஷ்ண ரெட்டி என நான்கு அமைச்சர்கள் வந்திருந்தனர். நான்கு அமைச்சர்களை கண்டு ரஜினிகாந்த் எழுந்து நின்று வணக்கம் செலுத்த அவர்களும் திகைப்புடன் பதில் வணக்கம் செலுத்தியிருக்கின்றனர். இந்நிலையில் கமலும் வந்துவிட இரு ஹீரோக்களும் மேடையில் போய் அமர்ந்திருக்கின்றனர்.
ஆளுங்கட்சிக்கு எதிராக வெளிப்படையாக பேசி, அரசியல் படை திரட்டி நிற்கும் கமலும், ‘சிஸ்டம் சரியில்லை’ என்று சொல்லி தனி கட்சிக்கு நாள் குறித்துவிட்ட ரஜினியும் மேடையில் மைக்கை பிடித்து ஆட்சி அதிகாரத்தை காயப்படுத்திவிடுவார்களோ என்று அமைச்சர்கள் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தது ஹைலைட். ரஜினியாவது பரவாயில்லை சிலேடையாக முடித்துவிடுவார். ஆனால் கமலோ கதிகலங்க பேசி வைத்துவிடுவாரே! அவர்கள் ஆட்சியை அசிங்கப்படுத்தினால், கீழிருந்து எதிர் குரல் கொடுப்பது அமைச்சர்களுக்கு அழகல்லவே! என நான்கு பேருக்கும் நடுக்கம்.
ஆனால் கமல் மற்றும் ரஜினியின் கரங்களுக்கு மைக் கொடுக்கப்படாமல் ஐசரி கணேஷ் தவிர்த்துவிட, அமைச்சர்களுக்கு ஒரு வழியாய் நிம்மதி பெருமூச்சு வந்தது.
ஹூம் தமிழக அரசியல் ஒரு டைப்பாத்தான் நகர்ந்திட்டிருக்குது!