வெள்ளிக்கிழமை ஆளுநர்! திங்கட்கிழமை பிரதமர்! 7 பேர் விடுதலைக்காக தீயாய் வேலைபார்க்கும் எடப்பாடி!

By vinoth kumarFirst Published Oct 7, 2018, 9:59 AM IST
Highlights

பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யும் விவகாரத்தில் வெற்றி பெற வேண்டும் என்கிற முனைப்புடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்ய ஜெயலலிதா இருக்கும் போதே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கால் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்வதில் முட்டுக்கட்டை நீடித்தது.

 

கடந்த மாதம் ஏழு தமிழர்கள் விவகாரத்தில் தமிழக அரசே ஆளுநர் ஒப்புதலுடன் முடிவு எடுத்துக் கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தில் அதி தீவிர முயற்சியால் உச்சநீதிமன்றத்திடம் இருந்து 7 தமிழர்களுக்கு சாதகமான தீர்ப்பு பெறப்பட்டது. இதனை தொடர்ந்து உடனடியாக கூடிய தமிழக அமைச்சரவை ஏழு பேரையும் விடுவிக்க வலியுறுத்தி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால் அந்த பரிந்துரையை பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து கிடப்பில் போட்டு வைத்துள்ளார். 

உச்சநீதிமன்றத்தில் ஏழு பேர் விடுதலைக்கு எதிராக ராஜீவ் காந்தியுடன் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி ஆளுநர் முடிவெடுப்பதில் தாமதம் செய்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் வெள்ளிக்கிழமை அன்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசினார்.  அப்போது வேறு அரசியல் விஷயங்கள் பேசப்பட்டாலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முழுக்க முழுக்க ஏழு பேரின் விடுதலை குறித்தே ஆளுநரிடம் பேசியதாக சொல்லப்படுகிறது. 

மேலும் ஏழு பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய உடனடியாக ஆவண செய்ய வேண்டும் என்று ஆளுநரை எடப்பாடி கேட்டுக் கொண்டதாகவும்  கூறப்படுகிறது. அதற்கு சட்டத்திற்கு உட்பட்டு தான் முடிவெடுக்க உள்ளதாக ஆளுநர் பதில் சொல்லியதாகவும் கூறப்படுகிறது.  இந்த நிலையில் வரும் திங்களன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். 

அப்போதும் கூட ஏழு தமிழர்களை விடுவிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி எடுத்துரைப்பார் என்றே கூறப்படுகிறது. மேலும் ஏழு பேரையும் விடுதலை செய்யும் பட்சத்தில் தமிழகத்தில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை சாதகமாக பயன்படுத்திக் கொள்வது குறித்தும் எடப்பாடி, மோடியிடம் விளக்குவார் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதில் உறுதியுடன் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதற்கான பணிகளில் தீவிரம் காட்டி வருவதாகவே கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

click me!