மத்திய அமைச்சராகிறார் ராஜீவ் சந்திரசேகர்.. சிறந்த நாடாளுமன்ற வாதிக்கு வெகுமதி.

By Ezhilarasan BabuFirst Published Jul 7, 2021, 3:15 PM IST
Highlights

மிகவும் ஆற்றல் வாய்ந்த, சிறந்த நாடாளுமன்றவாதியாக ராஜீவ் சந்திரசேகர் செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பதவி என்பது அவருக்கு மிகப் பொருத்தமானதுதான் என பலரும் பாராட்டி வருகின்றனர்.

பாஜக  நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ராஜீவ் சந்திரசேகர் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.  எந்தத் துறை அவருக்கு ஒதுக்கப்பட உள்ளது  என்பது குறித்த தகவல் இல்லை. மிகவும் ஆற்றல் வாய்ந்த, சிறந்த நாடாளுமன்றவாதியாக ராஜீவ் சந்திரசேகர் செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அமைச்சர் பதவி என்பது  அவருக்கு மிகப் பொருத்தமானதுதான் என பலரும் பாராட்டி வருகின்றனர். 

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி அமைத்து இரண்டு ஆண்டுகள் நிறைவாகி உள்ளது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இந்நிலையில் மத்திய அமைச்சர்களாக 43 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படும் எம்பிக்கள் பிரதமர் இல்லத்திற்கு வருகை தந்துள்ளனர். 

அந்த வரிசையில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ராஜிவ் சந்திர சேகருக்கு அமைச்சர் பதவி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது ராஜிவ் சந்திர சேகம் பாஜவின் எம்.பி மட்டுமல்லாது, பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்து வருகிறார். கடந்த 2006 ஆம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜீவ், தற்போது 3 வது முறையாக எம்.பி.
யாக பதவி வகித்து வருகிறார். அவர் பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றி வருகிறார். நடந்து முடிந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலின் இணைப் பொறுப்பாளாராக திறம்பட செயல்பட்டார்.

மேலும் அவர், நிதி தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர், பொது கணக்குக் குழு (பிஏசி) உறுப்பினர், தரவு பாதுகாப்பு மசோதா, 2019 கூட்டுக் குழுவின் உறுப்பினர் மற்றும் தகவல் தொடர்பு அமைச்சின் MoE & IT ஆலோசனைக் குழுவின் உறுப்பினர், மற்றும் தேசிய கேடட் படையினருக்கான மத்திய ஆலோசனைக் குழு உறுப்பினர், பெங்களூர் நகர மாவட்ட  மேம்பாட்டு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் இணைத் தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார். 

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிறந்த ராஜீவ் சந்திரசேகரின் தந்தை எம்.கே.சந்திரசேகர் இந்திய விமானப்படையின் விமான கமாண்டர் ஆவார். இந்தியா முழுவதும் பல்வேறு பள்ளிகளில் படித்த அவர், மணிப்பால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் மின் பொறியியல் பயின்றார். பின்னர் 1988 இல் சிகாகோவின் இல்லினாய்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியிலிருந்து கணினி அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றவர் ஆவார். பின்னர் அவர் ஹார்வர்ட் பிசினஸ் ஸ்கூலில் ஆறு வார மேம்பட்ட மேலாண்மை திட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பு பெற்றவர் ராஜீவ் சந்திரசேகர். அரசியலையும் தாண்டி பல்வேறு மக்கள நலப்பணிகளில் ஈடுபட்டு வரும் அவர், சிறந்த நாடாளுமன்றவாதி என பலராலும் பாராட்டப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 

 

click me!