ரஜினி அரசியலுக்கு வருவாரா ? ஒரு  அலசல்...

Asianet News Tamil  
Published : May 21, 2017, 07:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
ரஜினி அரசியலுக்கு வருவாரா ? ஒரு  அலசல்...

சுருக்கம்

rajinikanth political entery for sure

’’’’ நான் எப்ப வருவேன் , எப்டி வருவேன் என்பது யாருக்கும் தெரியாது , ஆனா வரவேண்டிய நேரத்தில கரெக்டா  வருவேன்.””  இது ரஜினி 90 களில் பேசிய வசனம். இதை இன்று வரை ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியும் அதை அப்படியே பராமரித்து ரசிகர்களையும் ஊடகங்களையும் நம்பவைத்து கொண்டிருப்பதுதான் இதில் விசேஷம்.

ரஜினி தற்போது ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் பேசியதன் மூலம் அரசியலுக்கு வருவார் என்ற சர்ச்சையை கிளப்பி விட்டுள்ளார். முன்பெல்லாம் மீடியாக்களை தவிர்த்து ஓடும் ரஜினி தற்போது மீடியாக்களை வலிய அழைத்து பேட்டி கொடுப்பது  மூலம் சந்தேகத்தை கிளப்பி உள்ளார்.

மறுபுறம் ஆமா இவர் எப்பவும் இப்படித்தான் சொல்வார் , 96 ல் இவரை நம்பினோம் ஆனால் தூக்கி போட்டுட்டு போய்விட்டார். 21 வருஷமா இவர் படம் வரும் போது அரசியல் பற்றி பேசுவார் . அப்புறம் காணாமல் போய் விடுவார். இப்பவும் அப்படித்தான் எந்திரன் 2 விளம்பர யுக்தி என்கிறார்கள். 

இதையெல்லாம் பார்க்கும் முன்னர் ரஜினி யார் அவரது குணாம்சம் என்ன ? , அரசியல் சூழல் போன்றவற்றை அலசினால் பல விஷயங்கள் புலனாகும். இன்றுவரை ரஜினி அரசியலுக்கு வருவார் வர மாட்டார் என விமர்சிப்பவர்கள் அனைவரும் அவர் மீதுள்ள விருப்பு - வெறுப்பு அடிப்படையில் அணுகுகின்றனர்.

சிலர் மொழி , இன அடிப்படையில் அணுகுகின்றனர்.  யதார்த்த நிலையில் இருந்து அணுகுவதும் உண்மைகளை ஏற்றுகொள்வதும் தான் எப்போதும் சரியாக இருக்கும். மோடி மீது கோத்ரா உட்பட ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் , பணமதிப்பிழப்பு போன்ற பல பின்னடைவுகள் இருந்தாலும் மோடி என்கிற மனிதரை தொடர்ந்து வெற்றி அடைய வைத்து வருகின்றனர் மக்கள். 

ஆகவே யதார்த்தம் என்பது வேறு நம் விருப்பம் என்பது வேறு. என்கிற ரீதியில் தான் எதையும் அணுக முடியும். 1980 களில் ரஜினி அரசியலுக்கு வந்த போது எம்.ஜி.ஆர் என்ற மிகப்பெரிய ஆதிக்கம் திரைத்துறையிலும் , அரசியலிலும் இருந்தது. 1987 எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு ரஜினி திரைப்படங்களில் வேறுவித கருத்துகள் ஒலிக்கும்படி பார்த்துகொண்டார்.

ஆனால் 1991 ல் முதல்வரான ஜெயலலிதா என்கிற ஆதிக்கம் தனக்கு கீழ் புல் பூண்டுகள் வளர விடாமல் பார்த்து கொண்டது. பொதுவாக தனது படங்களில் பெண்ணடிமைத்தன வசனங்களை வைக்கும் ரஜினியின் வசனங்கள் , அரசியலுக்கு எதிராக மக்களை ஆதரித்து அண்ணாமலை , பாட்சா , ராஜாதி ராஜா போன்ற படங்களில் அவர் பேசியது ஜெயலலிதா அரசுக்கு எதிரானது என்று கொம்பு சீவி விடப்பட்டது.

பொதுவாக ஒதுங்கி போகும் மனோ நிலை கொண்ட ரஜினியை வம்புக்கிழுத்தார் ஜெயலலிதா. 91-96 கால கட்டம் அரசியலில் ஆணவத்தின் உச்சகட்டமாக மக்களால் பார்க்கப்பட்டது. 96 பொது தேர்தலில் கருணாநிதி இதை சாமர்த்தியமாக பயன் படுத்தினார். ஜெயலலிதாவின் குடும்ப நண்பரும் ரஜினியின் ஆலோசகருமான சோ ராமசாமியின் ஆலோசனைப்படி ரஜினியும் திமுக தமாகா கூட்டணியை ஆதரித்தார். ஜெயலலிதாவுக்கு வாக்களித்தால் அப்புறம் அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது என்று கூறிய வசனம் பெரிதும் மக்களால் வரவேற்கப்பட்டது.

அன்று ரஜினி கட்சி ஆரம்பிக்கும் மிகப்பெரிய கோல்டன் ஆப்பர்சுனிட்டி ரஜினிக்கு கிடைத்தது. சினிமா வாய்ப்புகள் காரணமாகவும் , தனக்குரிய ஜாக்கிரதை உணர்ச்சி காரணமாகவும் ரஜினி அதை தள்ளி வைத்தார்.

அதன் பின்னர் திமுக கூட்டணியை 98 ல்  பாராளுமன்ற தேர்தலில்  திமுக கூட்டணியை ஆதரித்து வாய்ஸ் கொடுத்தும் திமுக ஆட்சியின் மீதிருந்த கோபம் காரணமாக அதிமுகவை பெருவாரியான எம்பிக்களை வெல்ல வைத்தனர் தமிழக மக்கள்.

இதனால் ரஜினியின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் எந்த கட்சியையும் ஆதரிக்கவில்லை. ஒரு கட்டத்தில் கருணாநிதியை வைத்துகொண்டே “ உங்களை நெருங்கினால் சுடும் விலகினால் குளிரும் ”  என்று மேடையில் பேசினார். அதன் பின்னர்  தன்னுடை  தனிப்பட்ட  விவகாரத்தில் ஜெயலலிதா உதவியதால் ஜெயலலிதாவுடன் இணக்கம் காட்டினார்.

அதன் பின்னர் திமுக , அதிமுகவை சம தூரத்தில் வைத்தார் ரஜினி. இதற்கு சோ வின் ஆலோசனையும் , ரஜினியின் ஜாக்கிரதை உணர்வும் காரணம். மறுபுறம் ஜெயலலிதா என்கிற மிகப்பெரும் சக்தியும் , கருணாநிதி என்கிற சக்தியும் அரசியலுக்குள் வர ரஜினியை யோசிக்க வைத்தது.

இந்த இடைவெளியை விஜயகாந்த் பயன்படுத்திகொண்டதும் அரசியலில் அவர் கடும் விமர்சனத்துக்குள்ளானதும் ரஜினியை யோசிக்க வைத்தது. ஆனாலும் உள் மன ஆசை விட வில்லை. இந்த நேரத்தில் தான் தேசிய அரசியலுக்கு ரஜினியை அழைத்தனர் பாஜகவினர். ஆனாலும் தமிழக அரசியலில் தேசிய படகை ஓட்ட முடியாது என்பதால் ரஜினி தட்டிக்கழித்து வந்தார்.

இந்நிலையில் 2016 ஆம் ஆண்டுகளின் இறுதியில் இயற்கை  தமிழகத்தின் இரண்டு பெரும் அரசியல் சக்திகளை இல்லாமல் செய்தது. ஜெயலலிதா மறைந்தார் , கருணாநிதி முடங்கினார். இந்த நிலையில் அதிமுகவும் இரண்டாக உடைந்தது. 

பாஜக நினைத்தது தான் தமிழகத்தில் என்ற நிலை. திமுக தலைமையும் அதீத போர்க்குணம் இல்லாத மிதவாத தலைமைக்கு மாறிவிட்ட நிலையில் இதுதான் சரியான நேரம் அரசியலில் நுழைய என்று உடனிருந்தவர்கள் தூபம் போட ஆலோசனை சொல்ல நண்பர் சோவும் இல்லாத நிலையில் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினி.

ஒருவனை கவிழ்க்க முதலில் அவனது ஆசையை தூண்டு என்று சதுரங்க வேட்டை படத்தில் ஒரு வசனம் வரும். அந்த பாணியில் பாஜக மேலிடமும் இறங்கி உள்ளது. எங்களுடன் வாருங்கள் வளமான எதிர்காலம் நீங்கள் ஒரு ஆணியையும் பிடுங்க வேண்டாம் உங்களை அரியணையில் அமர்த்துகிறோம் என ஆசைக்காட்டி வருகின்றனர். 

அதற்கு ரஜினியும் இசைவு தெரிவிக்க தயாராகிவிட்டார் என தெரிகிறது. தமிழகத்தில் இந்துத்துவ பாஜக வாசல் வழியாக நுழைவது சரியாக இருக்குமா? அல்லது தனிக்கட்சி துவக்கலாமா? என்ற குழப்பமும் ரஜினிக்கு உள்ளது. மேலும் போகின்ற அரசியல் சூழ்நிலையில் ரஜினியை  இழுத்து தலைவராக்கி ஓபிஎஸ் அணியுடன் கூட்டணி வைத்து 10 , 20 எம்.எல்.ஏக்களையாவது பெற்று கணக்கை துவக்கலாம் என்று பாஜக எண்ணுகிறது.

இதற்கு ரஜினி இணங்கினால் வேலை வேகமாக நடக்கும். ரஜினிக்கு ஆசை வந்துவிட்டது. ஆகவே விரைவில் அரசியலில் குதிப்பார். அது சொந்த வீடா , பாஜக எனும் வாடகை வீடா ? என்பது தான் இப்போது பிரச்சனையே. பாஜக கோஷ்டி பூசலும் காங்கிரசுக்கு சளைத்தது அல்ல அதையும் எதிர்கொள்ள வேண்டும். 

இத்தனை சவால்களுக்கு மத்தியில் ரஜினி அரசியலுக்கு வருவதை மக்கள் ஏற்பார்களா மாட்டார்களா? என்பதை காலமும் அவர் எதிர்கொள்ளும் விதத்தையும் பொறுத்தே அமையும். ஆனால் ஒன்று அரசியல் ரோஜாமலர் பாதை அல்ல முள் படுக்கை என்பது போக போக ரஜினிக்கு தெரியும். 

PREV
click me!

Recommended Stories

திமுக கூட்டணியில் பிளவு? முதல் ஆளாக தாவெக-வுக்கு ஓடும் சிபிஎம்! அதிரடி பின்னணி!
விஜய் கூட்டணிக்கு வேண்டாம்..! டெல்லியின் கணக்கை தவிடுபொடியாக்கும் எடப்பாடி..! அதிமுக-வின் 'மாஸ்டர் பிளான்'!