
நதி நீர் இணைப்புத் திட்டம் குறித்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ''மக்கள் நலனில் அக்கறை இருந்தால், நதி நீர் இணைப்புக்கு ரஜினிகாந்த் ரூ.1 கோடி கொடுக்க வேண்டும் என்றார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டது. அப்போது பேசிய ரஜினி, நாடு முழுவதும் நதிநீர் இணைப்பு கொண்டு வரவேண்டும்.
அப்படி செய்தால், எந்த மாநிலத்துக்கும் தண்ணீர் பிரச்சனை வராது. இதற்காக நான், எனது சொந்த பணத்தில் ரூ.1 கோடி தருகிறேன் என பகிரங்கமாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, ரஜினி சொந்த கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அவர், அரசியலுக்கு வருவதற்கு அனைத்து கட்சியினரும் ஆதரவு தெரிவிப்பதுடன், வரவேற்பதாக கூறியுள்ளனர்.
இந்நிலையில், நெல்லை தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரைக் கன்னடியன் கால்வாயில் இருந்து வெள்ளநீர்க் கால்வாய் மூலமாக திசையன்விளை, சாத்தான்குளம் ஆகிய வறட்சிப் பகுதிகளுக்கு திருப்பும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்காக, தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு ஆகிய நதிகளை இணைக்கவும், அதற்குத் தேவைப்படும் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாகவும் விவசாயிகளுடன் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், ராதாபுரம் தொகுதி அதிமுக எம்எல்ஏ இன்பதுரை கலந்து கொண்டு பேசியதாவது:- தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், திசையன்விளை, சாத்தான்குளம் உள்ளிட்ட வறட்சியானப் பகுதிகள் மேம்படும்.
இந்தப் பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியால், விவசாயம் செய்ய முடியாத நிலை உள்ளது. எனவே, இந்தத் திட்டம் நிறைவேறினால், விவசாயம் செழிக்கும். மக்களின் குடிநீர்த் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.
நாட்டுக்கே முன் உதாரணமாக உள்ள தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்பு திட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்தி வருகிறது.
நதிநீர் இணைப்புத் திட்டத்துக்கு ரூ.1 கோடி தருவதாக முன்பு நடிகர் ரஜினிகாந்த் கூறினார். உண்மையிலேயே அவருக்கு தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால், ரூ.1 கோடியை நெல்லை மாவட்டத்தில், தற்போது செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய தாமிரபரணி - நம்பியாறு - கருமேனியாறு இணைப்புத் திட்டத்துக்கு கொடுக்க வேண்டும்.
அதனை அவர் செய்ய முன்வருவாரா? தமிழக மக்கள் நலனில் அக்கறை இருந்தால் அவர் இதனைச் செய்வார்.
இவ்வாறு அவர் பேசினார்.