
நடிகர் ரஜினிகாந்த், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்று, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி அறிவித்தார். அதோடு வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என்ற தகவலையும் கூறினார்.
அவர் அறிவிப்பு வெளியிட்ட நேரத்தை அடிப்படையாக கொண்டு, சென்னையில் உள்ள முக்கிய ஜோதிடர் ஒருவர், அதற்கான பலன்களை கணித்து கூறியுள்ளார். அதன் விவரம்...
லக்னம்: மகரம், ராசி: ரிஷபம், நட்சத்திரம் : ரோகிணி.
ரோகிணி நட்சத்திரம் என்பதால், சந்திர திசை, மூன்று வருடம் சொச்சம் இருப்பு உள்ளது. மூன்று வருடம் கழித்து செவ்வாய் திசை வருகிறது.
செவ்வாயுடன், பனிரண்டாம் அதிபதி, அதாவது விரயாதிபதியான குருவும் இணைந்து இருப்பதால், செவ்வாய் திசை தொடங்கும்போது, இருக்கும் இடத்தை விட்டு வெளியேற நேரும்.
மகர லக்னத்திற்கு மாரகாதிபதியான சந்திரன், பூர்வ புண்ணிய, புத்தி ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் அமர்வதால், இந்த கட்சியில் இணைபவர்களால், சிக்கலும், நெருக்கடியும் ஏற்படும்.
எட்டாம் அதிபதியான சூரியனுடன் சேர்ந்து, லக்னாதிபதியான சனி பனிரண்டாம் இடத்தில் அமர்வதால், கட்சியை தொடர்ந்து மூன்று வருடம் நடத்துவதற்கு கூட படாத பாடு பட வேண்டி இருக்கும்.
பெயருக்கும், புகழுக்கும் காரணமாக விளங்கும் ஒன்பதாம் அதிபதியான, பாக்கியாதிபதி புதன், பாதக ஸ்தானமான பதினொன்றாம் இடத்தில் அமர்வதால், பெரும், புகழும் கெட்டுபோகும்.
எனவே, ரஜினியின் அரசியல் கட்சி, ஆரம்பத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, பின்னர், இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும். அடுத்து, காந்த் என்ற பெயரில் உள்ளவர்களுக்கு, அவர்களது மனைவியின் செயல்பாடுகள் காரணமாகவே, இழப்புகளையும், நஷ்டங்களையும் சந்திக்க நேரும் என்பது குறிப்பிடத்தக்கது.