
சில மாதங்களுக்கு முன்பாக அரசியலுக்குள் பிரவேசித்துவிடும் முடிவுக்கு கிட்டத்தட்ட வந்தேவிட்டார் ரஜினி. இந்த நேரத்தில் ட்விட்டர் அரசியல் மூலம் திடீரென டேக் ஆஃப் ஆன கமல்ஹாசன் ரஜினியை தாறுமாறாக ஓவர்டேக் செய்து பெரிய ஸ்பேசை பெற்றார். இவரது எழுச்சியால் ரஜினிகாந்த் அடங்கியே போனார்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஒலி சேர்ப்பு பணியில் பிஸியாக இருக்கும் கமல் அரசியலுக்கு கிட்டத்தட்ட லீவு விட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பரபரப்பு டாப் கியருக்கு மாறியது. இதனால் நாடே ரஜினியை நோக்கி திரும்பியிருக்கிறது.
டிசம்பர் 31-ம் தேதி (இன்று)யன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முடிவை சொல்வதாக ரஜினி அறிவித்து, தேசிய ஊடகங்கள் அவரது அறிவிப்புக்காக காத்திருக்கிருந்த நிலையில் கமல்ஹாசன் திடீரென பரபரப்பை தன் பக்கம் திருப்பும் சூட்சமத்தை துவக்கியுள்ளார்.
அதாவது வெகு நாட்களாக ட்விட்டருக்கு ஓய்வு கொடுத்திருந்தவர், இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4:12 மணிக்கு ஒரு ட்விட் செய்துள்ளார் அதில்
“புது வருடம் கண்டிப்பாய்ப் பிறந்தே தீரும். புது உணர்வும், பொது நலமும் நம் மனதில் பிறக்க வாழ்த்துக்கள். இவ்வருடமேனும் நேர்மை பெருகட்டும், ஆர்வம் பொங்கட்டும். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த ட்விட்டரின் மூலம் வழக்கம் போல் அ.தி.மு.க. கோஷ்டியை ‘பொது நலம் பிறக்கட்டும், நேர்மை பெருகட்டும்’ என கூறி உரசியிருப்பது ஒரு புறம். மறுபுறம் ரஜினி தன் முடிவை சொல்லும் நாளில் ஆட்டத்தை தன் பக்கம் திருப்பியிருப்பதன் மூலம்...
”தமிழகத்தில் தமிழரல்லாத ரஜினியின் அரசியல் பிரவேசம் கமல்ஹாசனுக்கு பிடிக்கவில்லை. எங்கிருந்தோ வந்து சினிமாவில் தன்னை புறந்தள்ளி பல ஆண்டுகளாக முதலிடம் பிடித்த ரஜினியை அரசியலில் முந்தவிடவே கூடாது என்பதில் கமல் தெள்ளத் தெளிவாக இருக்கிறார்.” என்கிற விமர்சனத்தை கமலின் இந்த திடீர் நியூ இயர் ட்விட்டர் மெய்ப்பித்திருக்கிறது என்கிறார்கள்.
- விஷ்ணு பிரியா