இந்து மதத்தை சேர்ந்த பள்ளி மாணவியை, கிறித்துவ மதத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுவரை ரஜினியையும், நீட்டையும், மாட்டையும் வைத்து அரசியல் செய்து வந்த பாஜக இப்போது மதமாற்றத்தை கையிலெடுத்துள்ளதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தி. வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’தஞ்சை மாவட்டம் - மைக்கேல்பட்டி தூய இருதய ஆண்டவர் மேனிலைப்பள்ளியின் மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று தஞ்சை மாவட்டக் காவல்துறையும், பள்ளிக் கல்வித்துறையும் தெளிவுப்படுத்தி விட்டன.
அப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களில் பெரும்பான்மையினர் இந்துக்களே. அவர்கள் யாரும் இதுபோன்ற மதமாற்றப் புகாரை இதுவரை கூறியதில்லை.
ஆனாலும், இந்து மதத்தை சேர்ந்த பள்ளி மாணவியை, கிறித்துவ மதத்திற்கு மாற்ற பள்ளி நிர்வாகப் பொறுப்பாளர்கள் வலியுறுத்தினார்கள் என்றும் அதனால் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டதாகவும் பாஜகவினர் பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு, போராட்டம் என்ற பெயரில், பல்வேறு நாடகங்களை அரங்கேற்றியும் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மாணவியின் தற்கொலையில் மதமாற்றத்திற்கான காரணம் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இவ்விவகாரத்தை அனைத்திந்திய பிரச்சினையாக மாற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக, கள ஆய்வு என்ற பெயரில், விசாரணை மேற்கொள்ள பாஜக தலைமை 4 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது.
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற நினைக்கும் பாஜக, இதுவரை ரஜினியையும், நீட்டையும், மாட்டையும் வைத்து அரசியல் செய்தது. இது தமிழ்நாட்டு மக்களிடையே எடுபடவில்லை என்ற நிலையில், தற்போது பள்ளி மாணவியின் தற்கொலை விவகாரத்தை கையில் எடுத்துள்ளது.
அதாவது, குஜராத், உத்தரப்பிரதேச மாநிலத்தை போன்று, தமிழ்நாட்டிலும் செயற்கையாக மதக்கலவரத்தை தூண்டி, பாஜகவை வளர்த்து, ஆட்சிக்கு வந்து விடலாம் என்ற பாஜகவின் திட்டம், வெட்ட வெளிச்சமாக புலப்படுகிறது. எனவே, பொய் பரப்புரையின் வாயிலாக, தமிழ்நாட்டில் மதக்கலவரத்தை தூண்ட நினைக்கும் பாஜக மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலுயுறுத்துகிறது’’என அவர் தெரிவித்துள்ளார்.