
அந்த கேள்வி பிறந்த அன்றே பிறந்த குழந்தைகளில் பலருக்கு திருமணமாகி குழந்தையும் பிறந்துவிட்டது. ஆனால் அந்த கேள்விக்குதான் இன்னமும் விடை தெரியவில்லை.
நீங்கள் தெளிவான தமிழர் என்றால் இந்நேரம் அது என்ன கேள்வியென்று புரிந்திருப்பீர்கள்....ஆம்! ‘ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?’ என்பதுதான். கடந்த சுமார் இருபது வருடங்களுக்கும் மேலாக இந்த கேள்வி விழிப்பதும், நீண்டு உறங்குவதும் பின் மீண்டும் எழுவதுமாக இருந்து வருகிறது. ரஜினியின் புதிய படங்கள் ரிலீஸை நெருங்குகையில் இப்படியான வாதங்கள் எழுவதும் பழைய வாடிக்கை.
ஆனால் 2017 முடியும் வரை ரஜினியின் புதுப்படம் எதுவும் ரிலீஸாகும் வாய்ப்பில்லை. இந்த சூழலில் கடந்த ஒரு மாதமாக இந்த கேள்வி சுற்றிச்சுழன்றடிக்கிறது. இம்முறை தமிழகத்தை தாண்டி டெல்லி வரை தொட்டுவிட்டிருக்கிறது. அதற்கான காரணங்கள்...
1) ரஜினியை அரசியல் முடிவை நோக்கி மோடி தள்ளுகிறார் எனும் பரப்புரை.
2) இந்த பேச்சு மீண்டும் எழுந்த சூட்டோடு மும்பையில் தன் காலா படப்பிடிப்பை ரஜினி துவங்கியது. அவரோடு ஒட்டிச் சென்ற இந்த அரசியல் பரபரப்பு வட இந்தியாவை கலக்கிவிட்டது. மஹாராஷ்டிரா முதல்வர் பட்னாவிஸின் மனைவி வந்து ரஜினியை சந்திக்குமளவுக்கு போனதெல்லாம் நேரடி அரசியல் விளைவுகள் இல்லையென்றாலும் இதன் நீட்சியே.
இந்நிலையில் ரஜினியை காலா முதற்கட்ட படப்பிடிப்புக்கு முன்பும், பின்புமாக அவரது போயஸ் இல்லத்தில் சில முக்கிய முகங்கள் சென்று சந்தித்திருக்கின்றன. அவராக அழைத்தது சிலரை, தாமாக சென்று அவரிடம் டைம் வாங்கி சந்தித்து தனக்கொரு பெப் ஏற்றிக் கொண்டவர்கள் சிலரும் அடக்கம்.
தமிழருவி மணியன், அர்ஜூன் சம்பத் போன்ற அரசியல் தளத்தில் இயங்கும் மனிதர்களும் கஸ்தூரி, லதா போன்ற ரிட்டயர்டு நடிகைகளும் அடக்கம்.
ரஜினியை சந்தித்துவிட்டு வந்த இவர்களில் யாருமே ‘அரசியலுக்கு வரும் முடிவில் அவரில்லை!’ என்று கூறாதது யோசிக்க வைக்கிறது. கிட்டத்தட்ட திடமான அரசியல் முடிவை நோக்கி ரஜினி நகர்ந்து கொண்டிருக்கிறாரோ என்றுதான் எண்ணிட தோண்றுகிறது.
“அரசியலுக்கு வருவதன் சாதக, பாதகங்கள் குறித்துக் கேட்டார். அரசியலில் இறங்கும்போது தனிக்கட்சியைத்தான் துவங்குவார்.” என்று கூறியுள்ளார்.
நடிகை கஸ்தூரியோ “எனது ட்வீட் ரஜினியின் அரசியல் வாய்ஸுக்கு எதிராக இருந்தது. அதற்கு கடுமையான விமர்சனங்களை சந்திச்சேன். ரஜினியின் அரசியல் முடிவு பற்றிய புரிதல் இல்லாம அவருடைய ரசிகர்கள் காத்திருப்பதை மனதில் வைத்துதான் நான் விமர்சனம் பண்ணியிருந்தேன்.
அவரை சந்திச்சப்போ இந்த சந்தேகங்களை நேரடியாகவே அவர்ட்ட கேட்டுட்டேன். அவர் அரசியலுக்கு வரப்போறது நிதர்சனம். அந்த முடிவுக்கு அவர் வந்துட்டார். அதை என்கிட்ட சொன்னார். அவர் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன்.” என்கிறார்.
நடிகை லதாவோ ‘சில மாதங்களுக்கு முன்பே அவருக்கு முக்கிய கட்சி ஒன்றில் இருந்து அழைப்பு வந்தது. ஆனால் ‘வேறு கட்சியில் இணைந்து பணியாற்றும் மனநிலையில் நான் இல்லை.’ என்று மறுத்துவிட்டார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற ஆர்வம் அவரிடம் இருக்கிறது. அவர் அரசியலுக்கு வருவது இது நல்ல நேரம். அவரே இது குறித்து விரைவில் வெளிப்படையாக பேசுவார்.” என்கிறார்.
ஆக முன்பு போல் அரசியல் டயலாக்குகளை மட்டும் உதிர்த்து பட்டாசுக்கு தீ வைத்துவிட்டு அது வெடித்துச் சிதறுவதை பற்றி கண்டுகொள்ளாமல் போகாமல் இந்த முறை நின்று எல்லாவற்றையும் கவனிக்கிறார், விவாதிக்கிறார், தன்னை விளக்குகிறார், அரசியல் புதிர்களுக்கு அர்த்தம் கேட்கிறார், தானே சில புதிர்களையும் போடுகிறார்.
இதன் இறுதி முடிவு என்னவாக இருக்கும் ? என்பதுதான் கரைவேஷ்டி கட்ட நெடு நாளாய் காத்திருக்கும் அவரது ரசிகனின் கேள்வி.
இதுவும் பழைய படியே கடந்து போய்...சிறிது காலம் கழித்து மீண்டும் துவங்கி பரபரப்பு கிளம்பினால், எல்லா தரப்பு தமிழர்களுக்கும் உணவில் உப்பின் அளவு இன்னும் அதிகம் என்று அர்த்தம்