ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு? பக்கவாதத்தால் பாதிப்பு என்ற தகவலால் பரபரப்பு...

By Ganesh RamachandranFirst Published Oct 29, 2021, 9:26 AM IST
Highlights

உடல் பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நேற்று சொல்லப்பட்ட நிலையில், அவருக்கு ரத்த நாளங்களில் திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக பக்கவாதம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாகவும் வெளியான தகவலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

71 வயதாகும் நடிகர் ரஜினிகாந்த், தீபாவளிக்கு ரிலீஸாகும் தனது அண்ணாத்த திரைப்படத்தை தன் பேரனுடன் பார்த்துவிட்டு அது பற்றி ஆடியோவும் நேற்று வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேற்று மாலையில் தகவல் வெளியானது.

முதலில் வருடாந்திர உடல் பரிசோதனைகளுக்காகவே அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இரவு வரையில் அவர் வீடு திரும்பாததால், காவேரி மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்கள் குவிந்தனர். ரஜினிகாந்த்திற்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதாவது, இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்க்கு போதிய ரத்தம் செல்லாததால் திசுக்கள் இறந்து போகும் ”இன்பார்க்ட்” என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டது. ரத்த குழாயில் அடைப்பு, ரத்த பாதை தானாகவே சுருங்குதல்,  ரத்தகுழாய்க்கு ஏற்படும் வெளிப்புற அழுத்தம் ஆகியவை இன்பார்க்டின் அறிகுறிகளாகும்.

இது ஒருபுறமிருக்க, அதிகாலை வேளையில், ரஜினிக்கு பக்கவாதம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரை வெளிநாடு அழைத்துச் சென்று சிகிச்சைகள் மேற்கொள்ள அனுமதி கேட்டிருப்பதாகவும் பரவிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி விசாரித்த போது, இது முற்றிலும் தவறான தகவல் என்று மருத்துவர்கள் தரப்பில் மறுக்கப்பட்டது. ஆனால் அதே நேரம் ரத்த நாள திசு அழிவு பாதிப்பு குறித்து மறுப்போ, விளக்கமோ தரப்படவில்லை. எம்.ஆர்.ஐ ஸ்கேன் செய்யப்பட்டதில் ரஜினிக்கான இன்பார்க்ட் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாகவும் ஆனால் எந்த இடத்தில் பாதிப்பு என்பதை கூறமுடியவில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத்திலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரம் இந்த வகை பாதிப்பு ஆபத்தானது அல்ல என்றும், சிறுநீரக பாதிப்பு உள்ள வயது முதிர்ந்தவர்களுக்கு வரும் வழக்கமான பிரச்சனை தான் என்றும் கூறுகிறார்கள். விரைந்து சிகிச்சை பெறுவதால் பெரிய பாதிப்பு இருக்காது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றவர் ரஜினிகாந்த். சிறுநீரக மாற்று செய்து கொண்டவர்களுக்கு மருத்துவர்கள் 8 ஆண்டுகள் வரையில் எந்தப் பிரச்சனையும் இருக்காது என்றும் அதன் பிறகு மிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் சொல்வது வழக்கம். ரஜினிகாந்த் சிறுநீரக சிகிச்சை பெற்று 10 ஆண்டுகள் ஆகின்றன. அரசியல் எண்ட்ரிக்கு அவர் நோ சொன்னதற்கு பின்னணியிலும் இதுவே இருப்பதாக பேசப்பட்டது. அரசியலை விட ரஜினியின் உடல்நலனே தங்களுக்கு முக்கியம் என்று அவரது குடும்பத்தார் கூறியிருந்தனர். இந்நிலையில் ரஜினிக்கு ஏற்பட்டுள்ள தற்போதைய பாதிப்பு அவரை சினிமாவிலிருந்தும் ஓய்வு பெற வைத்துவிடுமோ என்று பேசத்தொடங்கிவிட்டனர் அவரது ரசிகர்கள். அண்மையில் ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்ட நான்கு இயக்குநர்களிடம் கதை கேட்டும், ரஜினி எதற்கும் ஓகே சொல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

click me!