வயிற்று வலியால் தொடர்ந்து அவதி.. மீண்டும் தனியார் மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமி?

By vinoth kumarFirst Published Oct 29, 2021, 8:42 AM IST
Highlights

மாநகராட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டாம் கடும் சொற்களைப் பயன்படுத்தினால் அது ஆறாத வடுவாக மாறி விடும் என்றார்.

குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த ஒரு வாரமாக சேலத்தில் முகாமிட்டிருந்தார். நேற்று முன்தினம் ஓமலூரில்  நடந்த சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, நிர்வாகிகள் மத்தியில் பேசிய எடப்பாடியார்;- எனக்கு வயிற்று வலி இருக்கிறது. வலியையும் பொருட்படுத்தாமல் பேசுகிறேன். மாநகராட்சித் தேர்தலில் அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்.சட்டமன்ற தேர்தலின்போது எவ்வாறு பூத் கமிட்டி அமைத்து பணியாற்றினோமோ, அதே போல மாநகராட்சி தேர்தலிலும் பணியாற்ற வேண்டும்.

அத்தேர்தலில் கூட சில இடங்களில் சிறப்பாக பணியாற்றவில்லை என்றாலும் வெற்றி பெற்றுவிட்டோம். நம்மிடம் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒரு வார்டில் ஒருவருக்குத்தான் சீட் கொடுக்க முடியும். சீட் கிடைக்காதவர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்வதோ, சுயேட்சையாக நிற்கவோ கூடாது. இன்னும் 10 நாளில் பகுதி செயலாளர்களை அழைத்து  பேசுவேன். பூத் கமிட்டி அமைத்து அதில் அவர்களின் பெயருடன் செல்போன் நம்பரையும் வைத்திருக்க வேண்டும். காலையில் 2 பகுதி, மாலையில் 2 பகுதி என பூத் கமிட்டியை அழைத்து நானே பேசுவேன். 

எனக்கு வயிற்று வலி இருக்கிறது. வலியையும் பொருட்படுத்தாமல் உங்களிடம் பேசுகிறேன். ஏனென்றால் நமக்கு வெற்றி முக்கியம். நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். யாரைப்பற்றியும் தவறாக பேசவேண்டாம். ‘‘தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு’’ என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். தீயில் சுட்டப்புண் ஆறிவிடும், கடும் சொற்கள் ஆறாது என்பதை அனைவரும் உணரவேண்டும். யாரையும் தவறாக பேச வேண்டாம். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து வெற்றிபெற வேண்டும். யாரைப்பற்றியும் தவறாக பேச வேண்டாம் கடும் சொற்களைப் பயன்படுத்தினால் அது ஆறாத வடுவாக மாறி விடும் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.

வழக்கமாக கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு செல்லும்போது செய்தியாளர்கள் பேட்டி அளிப்பார். ஆனால், அவர் நேற்று பேட்டி அளிக்காமல் சென்றுவிட்டார். மாநில கூட்டுறவு வங்கி தலைவர் அவரது நண்பருமான இளங்கோவன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தியது, வேலை வாங்கி தருவதாக பல கோடி பணத்தை மோசடி செய்துவிட்டு ஏமாற்றிய அவரது நேர்முக உதவியாளர் நடுப்பட்டி மணி மீது மோசடி வழக்கு பதியப்பட்டுள்ளது. இதனால், இதுதொடர்பாக பல்வேறு கேள்வி எழுப்புவார்கள் என்பதால் செய்தியாளர் சந்திப்பை தவிர்த்துவிட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நேற்று காலை 9 மணிக்கு எடப்பாடி பழனிச்சாமி சென்னை புறப்பட்டு சென்றார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு எடப்பாடி பழனிச்சாமி உடல் நலம் பாதிக்கப்பட்டது. குடலிறக்க நோய்க்கான சிகிச்சை பெற்றுள்ளார். அதில் அவருக்கு தொற்று ஏற்பட்டு கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2 நாட்களாகவே வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் ஆகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. சிறுகுடலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடலிறக்க அறுவை சிகிச்சை மேற்கொண்ட நிலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 
 

click me!