நாட்டில் பிரதமர் மோடியை வெல்லக்கூடிய ஒரே தலைவர் ராகுல் மட்டும்தான்.. திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு..!

Published : Oct 28, 2021, 10:22 PM ISTUpdated : Oct 28, 2021, 10:25 PM IST
நாட்டில் பிரதமர் மோடியை வெல்லக்கூடிய ஒரே தலைவர் ராகுல் மட்டும்தான்.. திருநாவுக்கரசர் தாறுமாறு கணிப்பு..!

சுருக்கம்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகுதான் பல மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். 

தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று திருச்சி காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த மாதம் பொறுப்பேற்றார். புதுச்சேரியில் கிரண்பேடி ஆளுங்கட்சியின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியதுபோல ஆர்.என்.ரவியும் இருப்பார் என்பது பாஜகவினரின் எண்ணம். ஆனால், அவர் பொறுப்பேற்றது முதலே ஆளுங்கட்சியுடன் இணக்கமாகவே செயல்படுவதாகவே கூறப்படுகிறது. ஆனால், ஆளுநர் பொறுப்பேற்ற பிறகு இரண்டு முறை பிரதமர் மோடியைச் சந்தித்துபேசினார். இந்நிலையில் அதிமுக - பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ஆளுநர் ரவியை சந்தித்து, திமுக அரசு மீது புகார் வாசித்தனர்.

இந்நிலையில் அக்டோபர் 30 அன்று அனைத்து துணைவேந்தர்களுடன் ஆளுநரும் வேந்தருமான ஆர்.என்.ரவி சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. மேலும் அரசு துறை செயலாளர்களுடனும் ஆளுநர் ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக துறை செயலாளர்கள் தரவுகளுடன் தயாராக இருக்கும்படி தலைமை செயலாளர் இறையன்பு எழுதிய கடிதமும் பரபரப்பை ஏற்படுத்தியது. முந்தைய ஆட்சியில் ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக் கூட்டங்களை நடத்தியபோது திமுக கடுமையாக எதிர்த்தது. ஆளுநருக்கு கறுப்புக் கொடியும் திமுகவினர் காட்டினர்.

ஆனால், தற்போது திமுகவினர் இந்த விஷயத்தில் அமைதி காக்கின்றனர். அதேசமயம் திமுக கூட்டணி கட்சிகள் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு என கண்டித்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. சு.திருநாவுக்கரசர் இதுபற்றி கருத்து கூறியிருக்கிறார். திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “அரசியலமைப்புச் சட்டப்படி ஆளுநர்களுக்கென சில அதிகாரங்கள் உள்ளன. சில உத்தரவுகளை செயல்படுத்துவதற்கான உச்ச வரம்பு எல்லையும் உண்டு. ஆனால், அந்த எல்லையை உணர்ந்து, ஆளுநர்கள் அரசியலமைப்புச் சட்டப்படி செயல்படுவதே நல்லது. கடந்த காலங்களில் எல்லாம் ஆளுநர்கள் அப்படித்தான் செயல்பட்டு வந்தார்கள்.

ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வந்த பிறகுதான் பல மாநிலங்களில் ஆளுநர்களைப் பயன்படுத்தி இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறார்கள். எனவே, தமிழ்நாட்டின் புதிய ஆளுநர் தனது அதிகாரத்தின் எல்லைகளை உணர்ந்து, அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.” என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் திருநாவுக்கரசர் கூறுகையில், “மக்களவை, சட்டப்பேரவை, ஊரக உள்ளாட்சி ஆகிய தேர்தல்களைப்போல் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுகவுடன் சுமூகமான கூட்டணி தொடரும்” என்று தெரிவித்தார்.

ராகுல் காந்தியைப் பற்றி கேள்விக்கு பதிலளித்த திருநாவுக்கரசர், “ராகுல் காந்திக்கு பிரதமர் மோடியின் பலமும் தெரியும், பலவீனமும் தெரியும். எனவே, அவர் யாரிடமும் பாடம் படித்து அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாடாளுமன்றத்திலும் கட்சியிலும் தலைவராக இருந்த அனுபவம் ராகுலுக்கு உண்டு. எனவே மோடியைச் சமாளிக்கக்கூடிய, அவரை வெற்றி பெறக்கூடிய நாட்டில் உள்ள ஒரே தலைவர் ராகுல்காந்திதான். அதை காலம் விரைவில் நிரூபிக்கும்.” என்று தெரிவித்தார்.
 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்