
ஒரு நடிகர் என்ற முறையில் தன்னை பார்த்தால் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின்போது நடந்த வன்முறையில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக ரஜினிகாந்த் தூத்துக்குடி புறப்பட்டு சென்றுள்ளார்.
அதற்கு முன்னதாக தனது போயஸ் கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து ஆறுதல் கூற உள்ளேன். ஒரு நடிகர் என்ற முறையில் என்னை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். திமுகவும் அதிமுகவும் பரஸ்பரம் குற்றம்சாட்டி கொள்வது அரசியல் என தெரிவித்தார்.
திமுக மீதான முதல்வரின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், கடந்த கால சம்பவங்களை எப்போதாவது குறிப்பிடலாம். எப்போதுமே பின்னால் திரும்பியே பார்த்து கொண்டிருப்பது சரியாக இருக்காது என கருத்து தெரிவித்தார். சட்டமன்ற கூட்டத்தொரை திமுக புறக்கணிப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார்.