ரஜினிக்கு காவி சாயம் பூச முயற்சிப்பது யார்? தெறி பேட்டியின் பரபர பின்னணி!

By Selva KathirFirst Published Nov 9, 2019, 4:03 PM IST
Highlights

ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டே பேட்டிகளில் தமிழக அரசியலை அப்படியே தன்னை மையமாக வைத்து திருப்பியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

சென்னையில் இன்று காலை ஆழ்வார்பேட்டை ராஜ்கமல் இன்டர்நேசனல் பிலிம்ஸ் அலுவலகத்திற்கு மிகவும் சாதாரணமாகவே வந்து நின்றது அந்த இன்னோவா கார். உள்ளே இருந்து வழக்கமான உற்சாகத்துடன் விறுவிறு நடை போட்டு பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவிற்கு உள்ளே சென்ற ரஜினியின் இன்றைய பேச்சு என்னவாக இருக்கும் என்று அனைத்து பத்திரிகையாளர்களும் காத்திருந்தனர். மேடையில் சுமார் 20 நிமிடங்கள் பேசிய ரஜினி மறந்தும் கூட அரசியல் பேசவில்லை. கமல் அரசியலில் இருக்கும் நிலையில் அவருக்கு ஆதரவாக ஏதேனும் ரஜினி வாய்ஸ் கொடுப்பார் என்று கூட எதிர்பார்க்கப்பட்டது. உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ளும் மக்கள் நீதி மய்யத்திற்கு ரஜினியிடம் இருந்து வாழ்த்து கிடைக்கும் என்றும் பேசிக் கொண்டார்கள்.

ஆனால் மேடையில் பேசிய 20 நிமிடமும் ரஜினி முழுக்க முழுக்க கமலின் சினிமாவை மட்டுமே சிலாகித்தார். ஹேராம் படத்தை 40 முறைக்கும் மேல் பார்த்திருப்பதாக கூறி அங்கிருந்த கமல் ரசிகர்களை குஷிப்படுத்தினார் ரஜினி. நிகழ்ச்சி முடிந்ததும் செய்தியாளர்கள் சூழ்ந்து கொள்ள வழக்கமான சிரித்த முகத்துடன் அவர்களை தவிர்த்துவிட்டு சென்ற ரஜினி, போயஸ் கார்டனில் காத்திருந்த செய்தியாளர்களிடம் பட்டாசாக வெடித்தார்.

அதிலும் தனக்கு காவி நிறம் பூச முயற்சிக்கிறார்கள் என்றும், ஆனால் அதில் தான் மாட்ட மாட்டேன் என்று கூறிவிட்டுச் செல்ல தமிழக அரசியல் தகதகத்துப்போனது. ஆனால் அப்போது ஒரு சில ஊடகங்கள் மட்டுமே இருக்க மற்றவர்கள் தாமதமாக வந்து சேர்ந்தனர். வழக்கத்திற்கு மாறாக அவர்களுக்காக மீண்டும் பேட்டி கொடுக்க வந்தார் சூப்பர் ஸ்டார். அப்போது ஒரு சிலர் மட்டுமே தனக்கு காவிச் சாயம் பூச முயற்சிப்பதாகவும் அரசியலில் இது சகஜம் என்றும் சாதரணமாக கூறிவிட்டு சென்றார் ரஜினி.

அந்த ஒரு சிலர் யார் என்கிற கேள்வி பலரின் மண்டையை குடைய தற்போது ரஜினியுடன் மிக நெருக்கமாக இருக்கும் முன்னார் காங்கிரஸ் பிரமுகர் ஒருவரிடம் அது பற்றி பேசினோம். அப்போது சந்தேகமே வேண்டாம் அண்ணன் ரஜினி மீது காவிச் சாயம் பூச முயற்சிப்பது திமுகவே தான். ஸ்டாலினைத்தான் அண்ணன் ரஜினி அப்படி மறைமுகமாக கூறிவிட்டு சென்றுள்ளார்.ரஜினியை பாஜகவுடன் தொடர்பு படுத்தி மீம்ஸ் போடுவது, ட்விட்டரில் டிரெண்டிங் பண்ணுவது என அனைத்து வேலைகளையும் பண்ணுவது திமுகவின் ஐடி விங்தான். இது குறித்தது ரஜினியிடம் பல முறை ஆதாரத்துடன் நானே கூறியுள்ளேன் என்று முடித்துக் கொண்டார். சரி அப்படி என்றால் ரஜினி தனது அரசியல் எதிரியாக ஸ்டாலினைத்தான் நினைத்து களம் இறங்க வேண்டும் போல.
 

click me!