
தமிழகத்தை பொறுத்தவரையில் ஒரு சென்டிமெண்ட் உண்டு. அதாவது ’அழைத்தும் திருமண வீட்டிற்கு செல்லாவிட்டாலும் தப்பில்லை! ஆனால் அழைக்காவிட்டாலும் இழவுக்கு செல்ல வேண்டும்’ என்பதே.
ரசிகர்களை தொண்டர்களாக மாற்றி, அரசியலுக்குள் குதிக்கும் ரஜினிகாந்த் இந்த சென்டிமெண்டை ஃபாலோ செய்யாத காரணத்தால் ஆதங்கத்தில் வெடிக்கிறார்கள் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள்.
விவகாரம் இதுதான்...கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் திருச்சி மாவட்ட செயலாளராக இருந்தவர் சாகுல் ஹமீது. தமிழ் திரையுலகில் திருச்சி மண்டல கலெக்ஷனை பொறுத்துத்தான் ஒரு படத்தின் வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மண்டலத்தின் தங்கள் தலைவர் ரஜினியின் படத்தை வெற்றி பெற வைப்பதில் சாகுல் ஹமீது அதீத ஆர்வம் காட்டி உழைத்தார்.
இப்பேர்ப்பட்ட நிர்வாகி கடந்த சில வாரங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இந்த இறப்புக்கு ரஜினிகாந்த் கண்டிப்பாக வருவார்! வரத்தான் வேண்டும்! என்று எதிர்பார்த்தனர் அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள். ஆனால் அவர் வரவில்லை. இதில் நிர்வாகிகளுக்கு கடும் வருத்தம். சரி, ரஜினியின் நிழலாக வலம் வரும் சுதாகராவது வந்து நிற்பார் என்று நினைத்தனர். ஆனால் அவரும் வரவில்லை, மாறாக ரஜினி எழுதிய இரங்கல் கடிதத்தை யாரோ ஒருவரிடம் கொடுத்தனுப்பிவிட்டாராம் சுதாகர்.
இப்படி ரஜினியிடம் எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனராம். ’இத்தனை வருடங்களாக தலைவரின் படங்கள் வெற்றி பெற பாடுபட்டோம். முன்பெல்லாம் அவரது படம் வெளியாகும் போது மட்டும்தான் எங்களின் உழைப்பும், பணமும் கரையும்.
ஆனால் இப்போது அரசியல்! என்கிறார். அதிலும் அவரை தூக்கிச் சுமக்க தயாராகிவிட்டோம். இனி எங்களின் உழைப்பும், காசும் தினம் தினம் கரையும். ஆனால் அதையெல்லாம் பெரிதாய் எடுத்துக் கொள்ளாமல் நாங்கள் உழைத்துக் கொட்ட தயாராகி நிற்கிறோம்.
இந்த நிலையில் எங்களின் அடிப்படை உணர்வுகளுக்கு கூட தலைவர் நேரில் வந்து நியாயம் செய்யாவிட்டால் எப்படி? தலைவரின் படங்கள் வெற்றிகரமாக ஓட போஸ்டர் ஒட்டியதில் துவங்கி, கமல் ரசிகர் மன்றத்தினருடனான சண்டையில் லாக் அப் சென்றது வரை சாகுலின் பணி பெரிது. அவரின் இறப்புக்கு தலைவர் வந்திருக்க வேண்டும் கட்டாயமாக.
அரசியல்வாதிகள் கல்யாண வீட்டுக்கு போகாவிட்டாலும், இழவுக்கு கண்டிப்பாய் போவார்கள். ஆனால் எங்கள் தலைவர் இப்படி இருந்தால் நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்கிறார்கள்.
வருத்தம்தான்!