
வரும் ஏப்ரல் மாதம் முதல் நடிகர் ரஜினிகாந்த் தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தன்று தனது கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைளை அறிவிக்கிறார்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக விளங்கும் கமலஹாசனும், ரஜினிகாந்த்தும் , ஒரே நேரத்தில் அரசியலில் குதிக்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் இருவருமே ஜெட் வேகத்தில் செய்து வருகின்றனர்.
நடிகர் கமல்ஹாசன் வரும் 21-ஆம் தேதி தனது சொந்த மாவட்டமான ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அப்துல் கலாம் இல்லத்தில் தனது கட்சியின் பெயரை அறிவித்து, தனது அரசியல் சுற்றுப் பயணத்தைத் தொடங்கவுள்ளார். மேலும் அன்று மாலை மதுரையில் தனது முதல் அரசியல் பொதுக்கூட்டத்தை நடத்துகிறார். இதைத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் கமல் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வரும் தமிழ் புத்தாண்டு தினத்தன்று கட்சியின் பெயரை அறிவித்து அரசியலுக்கு வர இருப்பதாக அவரது ரசிகர் மன்ற வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், தமிழகம் முழுதும் வரும் ஏப்ரல் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன் முதல்கட்டமாக திருச்சி அல்லது மதுரையில் மாபெரும் மாநாடு ஒன்று நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றத்தில் மாநில செயலாளராக ராஜு மகாலிங்கத்தை நியமித்து ரஜினிகாந்த் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ராஜு மகாலிங்கம் லைகா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தவர்.