
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் உறுதி என்று கூறி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை டிச. 31 ஆம் தேதி வெளியிட்டார். அப்போது, ஆன்மிக அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரப் போவதாகக் கூறியிருந்தார்.
இதனிடையே, ஆன்மிக அரசியல் என்ற வார்த்தை சமூக வலைத்தளங்கள் மட்டுமல்லாது, அரசியல் கட்சியினர் மட்டத்திலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இது குறித்து விமர்சிக்கப் பட்ட நிலையில், தான் கூறும் ஆன்மிக அரசியல் என்றால் என்ன என்பது பற்றி விளக்க வேண்டிய கட்டாயத்தில் ரஜினி இருந்தார். இந்நிலையில் ரஜினி இன்று தனது ஆன்மிக அரசியல் சொல்லுக்கான பொருளை விளக்கினார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் நேர்மையான அரசியலைச் செய்யாததால் அற வழி அரசியல் செய்வதற்காகவே, தான் ஆன்மிக அரசியலில் ஈடுபடப் போவதாக அவர் கூறினாராம்.
அரசியல் களத்தில் தான் இறங்கப் போவது குறித்து அறிவித்த மூன்றாவது நாள், செவ்வாய்க்கிழமை இன்று, சென்னையில் பத்திரிகையாளர்கள் சிலரைச் சந்தித்துப் பேசினார் ரஜினி. ஒரு தனியார் ஹோட்டலில் இன்று மதியம் செய்தியாளர்களைச் சிலரைச் சந்தித்து, தனக்கு அவர்களின் ஆதரவு வேண்டும் என்று கேட்டுக் கொண்ட ரஜினி காந்த், ''தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் கட்சிகள் உண்மை, வெளிப்படைத்தன்மை இல்லாமல் செயல்படுவதால், தர்மம், உண்மை ஆகியவற்றைக் கொண்ட அறவழி அரசியலை முன்னிலைப் படுத்தவே, தான் ஆன்மிக அரசியல் என்று குறிப்பிட்டதாகக் கூறினார்.
தர்மத்தோடு நடந்துகொள்வதுதான் ஆன்மிக அரசியல் என்றும், அந்த வழியிலேயே தனது கட்சியை பலப்படுத்தும் வேலைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார் ரஜினிகாந்த்.
தாம் திரைத்துறைக்குள் வரும் முன்னர், பெங்களூரில் சம்யுக்த கர்நாடக இதழில் இரண்டு மாதங்கள் வேலை செய்ததாகத் தெரிவித்த ரஜினி, தாமும் பத்திரிகையாளரே என்று கூறினார்.
தமிழகத்தில் ஏன் ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கேள்விக்கு பதிலளித்த போது, இந்திய அரசியலில் சுதந்திரப் போராட்டம் துவங்கி எல்லா முக்கிய நிகழ்வுகளும் தமிழகத்தில் இருந்தே தொடங்கியுள்ளது. எனவே நான் நினைக்கும் அரசியல் புரட்சியும் தமிழகத்தில் இருந்து தொடங்கட்டும் என்பதுதான் என் ஆசை என்று கூறினார்.