ரஜினியும், கமலும் செல்லாத ரூபாய் நோட்டுகள்; மக்களுக்கு இவர்கள் பயன்பட மாட்டார்கள் - துணை சபாநாயகர் பளீர்...

First Published May 7, 2018, 8:45 AM IST
Highlights
Rajini and Kamal invalid currencies not useful to people - Deputy Speaker


கோயம்புத்தூர்
 
திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெற்ற நடிகர்கள், தொடர்ந்து இனிமேல் கதாநாயகனாக நடிக்க முடியாதவர்கள் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகள். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவில் அண்ணா பாரம் தூக்கும் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தினவிழா பொதுக்கூட்டம் நடந்தது. 

இந்த விழாவுக்கு தொழிற்சங்க தலைவர் டி.எல்.சிங் தலைமை வகித்தார். பேரூராட்சி கழக செயலாளர் மூர்த்தி, ஒன்றிய அவைத்தலைவர் மனோகரன், முன்னாள் நகரசெயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொழில்சங்க செயலாளர் மாரிமுத்து வரவேற்று பேசினார். 

இந்த விழாவில் சட்டப்பேரவை துணைசபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பங்கேற்ரு அ.தி.மு.க கொடியை ஏற்றி வைத்து இனிப்பு வழங்கி பேசினார். 

அப்போது அவர், "தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சி கவிழ்ந்துவிடும் என கனவு காண்கிறார். அது நடக்காது. 

தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சிறப்பான ஆட்சி நடைபெற்று வருகிறது. 

ஜெயலலிதா தமிழக மக்களுக்கு அறிவித்த அனைத்து திட்டங்களையும் இந்த அரசு விரைந்து வழங்கி வருகின்றது. 

ஜெயலலிதா அறிவித்த பெண்களுக்கான இருசக்கரவாகனம் வழங்கும் திட்டம் கடந்த ஆண்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்துக்காக நடப்பாண்டில் நிதிநிலை அறிக்கையில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல, தாலிக்கு ஒரு சவரன் தங்கம், மாணவ - மாணவிகளுக்கு மடிக்கணினி, அம்மா உணவகம் திட்டங்கள் உலக அளவில் பாராட்டப்பட்டவை.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா என்னென்ன திட்டங்களை வழங்கினார்களோ? அந்த திட்டங்களைத்தான் பா. ஜனதா கட்சி கர்நாடகாவில் தற்போது தேர்தல் அறிக்கையாக தயாரித்து வெளியிட்டுள்ளார்கள்.

இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்துகிறது என்றால் அதற்கு வழிகாட்டியாக திகழ்ந்து வந்தவர் ஜெயலலிதா. 2016 -ஆம் ஆண்டு விவசாயிகளின் நலன் காக்க சிறு குறு விவசாயிகளின் முழு கடன் 7000 கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளது நமது அரசு. அனைத்து தரப்பினரும் ஆதரிக்கும் ஆட்சிதான் ஜெயலலிதாவின் ஆட்சி.

இந்த ஆட்சியை அசைக்க வேண்டும் என்று யாரும் கனவு கண்டால் அவர்களின் கனவு பலிக்காது. இன்று திரைப்பட துறையில் இருந்து ஓய்வு பெற்ற நடிகர்கள், 65 வயதை தொட்டுக் கொண்டிருக்கும் நடிகர்கள், தொடர்ந்து இனிமேல் கதாநாயகனாக நடிக்க முடியாதவர்கள், அரசியலில் ஜெயலலிதா இல்லாத வாய்ப்பை பயன்படுத்தி முதலமைச்சர் நாற்காலியில் உட்கார வேண்டும் என நினைக்கிறார்கள். இவர்கள் செல்லாத ரூபாய் நோட்டுகள். இவர்களால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை" என்று அவர் கூறினார்.

click me!