எடப்பாடியாரை மிரட்டினாரா ராஜேந்திரபாலாஜி..? “மீடியாட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு சாமியாராகிடுவேன்..”

Published : Feb 09, 2022, 01:17 PM IST
எடப்பாடியாரை மிரட்டினாரா ராஜேந்திரபாலாஜி..? “மீடியாட்ட எல்லாத்தையும் கொட்டிட்டு சாமியாராகிடுவேன்..”

சுருக்கம்

கைதானதில் இருந்து கட்சியினர் அவரை பெரிதாய் கண்டுகொள்ளவே இல்லை என்று அவருக்கு கடும் வருத்தமாம்

தி.மு.க. ஆட்சியில் அமர்ந்ததும், விரட்டி விரட்டி வெச்சு செய்யப்படும் மாஜி அமைச்சர் இவர்தான்! என்று எல்லோராலும் சுட்டிக்காட்டப்பட்டவர் பழைய ஆவின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான். அது அப்படியே பலித்தது. இத்தனைக்கும் முதலில் அவர் மீது கை வைக்கவில்லை, அவர் வீட்டுக்கு ரெய்டு அனுப்பவில்லை. அவர் மீது வைக்கப்பட்ட முதல் குற்றச்சாட்டே ‘அரசு வேலை வாங்கி தருவதாக சொல்லி பண மோசடி செய்துவிட்டார்’ எனும் புகாரில் பதியப்பட்ட வழக்குதான்.

அம்மாம் பெரிய அரசியல்வாதிக்கு இது ஒன்றும் பெரிய டேமேஜிங்  புகார் அல்ல. ஆனால் இதற்காக கைது செய்யப்போகிறோம் என்று ராஜேந்திர பாலாஜியை ஊர் ஊராக, மாவட்டம் மாவட்டமாக, மாநிலம் மாநிலமாக சில வாரங்கள் தலை தெறிக்க ஓட விட்டு அப்புறம் கர்நாடக மாநிலத்தில் வைத்து நட்ட நடு ரோட்டில் அமுக்கினார்களே அதுதான் ஸீனே. கைதுக்கு சில மணி நேரங்களுக்கு முன், ராஜேந்திர பாலாஜி ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது கூட அவரை நாசூக்காக வளைத்திருக்கலாம். ஆனால் அப்படி செய்யாமல், நடு ரோட்டில் வைத்து மடக்கியதுதான் அரசியல் அஸ்திரம் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள்.

ஆளும் அரசுக்கு இந்த மாஜி ஆவின் மேல் அப்படி என்ன கோபம் என்றால், அ.தி.மு.க. ஆட்சியின் போது கோயமுத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அ.தி.மு.க. நிகழ்ச்சி ஒன்றில் பேச வந்த பாலாஜி, கோபாலபுரம் குடும்பத்தை மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். அதற்கான அதிரடி பழிவாங்கலே இந்த ஓடவிட்டு கைது என்கிறார்கள்.

அந்த வழக்கில் திருச்சி சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிலை திருட்டு குற்றவாளியின் செல் அருகே அடைக்கப்பட்டு மேலும் அவமானப்படுத்தப்பட்டார். ஆனாலும், அந்த வழக்கில் ஒரு வழியாக நிபந்தனை ஜாமீன் வாங்கி, இப்போது சொந்த மாவட்டமான விருதுநகரிலேயே இருக்கிறார் பாலாஜி.

இப்படியிருக்க, அவர் கைதானதில் இருந்து கட்சியினர் அவரை பெரிதாய் கண்டுகொள்ளவே இல்லை என்று அவருக்கு கடும் வருத்தமாம். பல நாட்களாக நீண்ட முயற்சி எடுத்தும் எடப்பாடியார் மற்றும் பன்னீர்செல்வம் இருவரிடமும் அவரால் பேச முடியவில்லையாம். கடைசியில் மேற்கு தமிழகத்தை சேர்ந்த ஒரு மாஜி அமைச்சருக்கு போன் போட்டு கண்ணீர் விட, அந்த மாஜி, மேலும் சில முன்னாள் அமைச்சர்களை அழைத்துக் கொண்டு சென்று ராஜேந்திர பாலாஜியை அவரது வீட்டில் சந்தித்தார். அப்போது பன்னீர் மற்றும் எடப்பாடியாரிடம் தன் தரப்பு தகவல்களாக பல விஷயங்களை சொல்லி, தனக்கு கட்சியில் சில முக்கியத்துவங்கள் தரவேண்டும்! என்றும், அப்படி தரப்பட்டால்தான் தன் மீது வலுவாக கை வைக்க ஆளுங்கட்சி தயங்கும்! என்றும் கேட்டிருந்தார்.

இவை அப்படியே ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனாலும் நோ யூஸ். கண்டுக்கவேயில்லை அவர்கள். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தலும் வந்துவிட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட லிஸ்ட் எடுக்கப்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜியை கண்டுகொள்ளாமலே இருந்திருக்கிறது தலைமை. இதை தலைமை கழகத்தில் தனக்குள்ள ஒற்றர்கள் மூலமாக தெரிந்து கொண்ட ராஜேந்திர பாலாஜி, மீண்டும் அந்த மேற்கு தமிழக மாஜி அமைச்சருக்குப் போன் போட்டு “என்னை ரொம்ப ஒதுக்கி வைக்குது தலைமை. என்னால இந்த அவமானத்தை தாங்கிக்க முடியலை. மாஜி அமைச்சர்களுக்கு கொடுக்கப்படுற அங்கீகாரங்கள், முன்னுரிமைகள், சலுகைகள் எனக்கும் தரப்படணும். நானும் கட்சிக்காக நாயா உழைக்கிறவன் தான். அப்படி எனக்கு அங்கீகாரம் இல்லேன்னா நான் அரசியலுக்கு முழுக்கு போட்டுடுறேன். என் மன நிம்மதிக்காக முழு நேர சாமியாராவே போயிடுறேன். ஆனால் போறதுக்கு முன்னாடி பிரஸ் மீட் போட்டு, ஆதி முதல் இன்னைக்கு வரை அத்தனை விஷயங்களையும் கொட்டி தீர்த்துட்டு, சுத்தமான மனசோட காவி கட்டிக்கிறேன். இதை தலைமைட்ட, குறிப்பா அண்ணன் எடப்பாடியார்ட்ட சொல்லிடுங்க. இதுக்கு மேலே எனக்கு வேற வழி தெரியல.” என்று ஆதங்கமும், ஆத்திரமுமாக பேசியுள்ளார்.

என்னடா இது தொல்லையா போச்சு! என்று அந்த மாஜி அமைச்சரும் எடப்பாடியாரின் கவனத்துக்கு இதை கொண்டு போய் சேர்த்திருக்கிறார். டென்ஷனான எடப்பாடியாரும் ‘ஏற்கனவே இந்த ஆளாள கட்சி பட்ட அசிங்கம் போதாதா, இப்ப சாமியாறாகுறேன்னு சொல்லிட்டு எதையெதையோ பேசிட்டு போயிட்டால் நாமதான் எல்லாத்துக்கும் பதில் சொல்லணும். சரி, அவர மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கிடுவோம். வேலையை பார்க்க சொல்லுங்க.’ என்று பதவியை போட்டுக் கொடுத்திருக்கிறார்.

லிஸ்டில் தானும் இருக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகே ராஜேந்திர பாலாஜிக்கு பிரஷர் நார்மலாகியதாம்.

இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரத்துக்காக சிவகாசிக்கு சென்ற எடப்பாடியாருக்கு சிறப்பான வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார் ராஜேந்திர பாலாஜி. அப்போது அவரிடம் ‘எப்படியோ அழுது புரண்டு பொறுப்பை வாங்கிட்டய்யா. ஆனா பெரிய ஆளுய்யா நீ’ என்று கலாய்க்க, கன்னம் சிவக்க சிரித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.

பின்னே சும்மாவா? மோடியையே ‘டாடி’ன்னு சொன்னவராச்சே!

PREV
click me!

Recommended Stories

எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!
தவெக அலுவலகம் பிரமாதம்..! அறிவாலயம் போனா சுடுகாடு மாதிரி இருக்கும்.. நாஞ்சில் சம்பத் அதிர்ச்சி பேச்சு