வந்துட்டாருய்யா ராஜேந்திர பாலாஜி வந்துட்டாரு... ’திமுககாரர்கள் இனிமேல்தான் ஜாக்கிரதையா இருக்கணுமாம்..!’

By Thiraviaraj RMFirst Published Jan 13, 2022, 11:37 AM IST
Highlights

ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் விடுதலை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.
 

ராஜேந்திர பாலாஜி ஜாமீனில் விடுதலை பெற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து வெளியே வந்தார்.

முன்னாள் அதிமுக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கடந்த 5ஆம் தேதி கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து ராஜேந்திர பாலாஜிக்கு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமின் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது திருச்சி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட அவர் விருதுநகரில் இருக்கிறார்.

அதிமுக ஆட்சியின்போது அமைச்சர்களில் திமுகவை ராஜேந்திர பாலாஜியை விட காட்டமாக விமர்சித்தவர்கள் எவரும் இருக்க முடியாது. 
“ஊழல் குறித்து பேச கூடிய அருகதை மு.க. ஸ்டாலினுக்கு கிடையாது. ஒரு காலும் மு.க. ஸ்டாலினால் தமிழக முதல்வர் ஆக முடியாது. தேவர் ஜெயந்தி அன்று கொடுத்த திருநீறை கீழே தள்ளி விட்டு, அதை கொள்கை என ஸ்டாலின் சொல்கிறார். எதிர்க்கட்சி தலைவர் பதவியையும் ஸ்டாலின் இழக்க போகிறார். கடவுள் நம்பிக்கையைப் பொறுத்தவரை அதிமுகவும் பாஜகவும் ஒன்றுதான். 

எங்களை சங்கி என்கிறார் ஸ்டாலின். நாங்கள் சங்கி அல்ல. 5 ஆண்டுகள் நக்கி பிழைத்தது ஸ்டாலின்தான். சங்கி என்று சொல்பவர்களுக்கு திஹார் ஜெயில் தயாராக உள்ளது. விட்டால் ஸ்டாலின் எங்களையெல்லாம் சுட்டுக்கொன்று விடுவார் போலிருக்கிறது. ஒழுக்கமாகப் பேசினால் நாங்களும் ஒழுக்கமாக பேசுவோம். இல்லாவிட்டால் அசிங்கமாகப் பேசுவோம்.

ஸ்டாலினுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது. இது என்ன பொழப்பு. தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீரை கீழே கொட்டறார். ஒரு பள்ளிவாசலுக்கு போனால், நோன்பு கஞ்சி குடிக்க கொடுத்தால், குடிக்கணும். குடிக்க மறுத்தால் பள்ளிவாசலுக்கு உள்ளே போகாதே. சர்ச்சுக்குள்ள ஸ்வீட் கொடுத்தால் அதை சாப்பிடணும். பிடிக்கவில்லையா அங்கே போகாதே.

அந்த மாதிரி தேவர் ஜெயந்திக்கு போனால் திருநீறு கொடுப்பது வழக்கம். அங்கே தீபாராதனை காட்டி திருநீறு தருவாங்க. அம்மா புரட்சித்தலைவி அங்கே போயிருக்காங்க. அவருக்கும்தான் திருநீறு தந்தாங்க. மனசார வாங்கி நெற்றியில் பூசிக்கிட்டாங்களே. ஸ்டாலினுக்கு பிடிக்கலையா, பக்கத்தில் இருக்கிறவங்ககிட்ட தந்திருக்கலாம். இல்லேன்னா திருநிறு பூசுறது எனக்கு வழக்கம் இல்லைன்னாவது சொல்லி இருக்கலாம். கேட்டால் கொள்கைன்னு சொல்றார். என்ன கொள்கை இருக்கு ஸ்டாலினுக்கு?

உன்னுடைய மனைவி எல்லா கோயிலுக்கும் போறாங்க.. வீட்டில் நவராத்திரி கொலு நடத்துறாங்க.. உன் பெயரில் அர்ச்சனை செய்கிறார்.. நீ மட்டும் அடுத்த சாமி கும்பிட போகாதே., திருநீர் வைக்காதே... குங்குமம் வைக்காதே... நாமம் போடாதே என கிண்டலும், கேலியும் பேசுறே.. உங்கள் வீட்டிற்கு புட்டபர்த்தி சாய்பாபா வரும்போது உங்கள் தாயார் தயாளுஅம்மாள் சாய்பாபாவிடம் திருநீர் வாங்கிக்கிட்டாங்களே.. மடிப்பிச்சை போல் வாங்கினார்.

பக்கத்தில் கலைஞரும்தான் உட்கார்ந்திருந்தார். துரைமுருகன் அண்ணாச்சி கூட ஒரு மோதிரம் வாங்கிக் கொண்டார். என்ன பெரிய நாத்திகம் பேசுகிறீங்க. நாத்திகன் என்றால் கோயிலுக்கு போகாதே. பள்ளிவாசல், சர்ச்சுக்கு போகாதே. இந்து கோயிலுக்கு போகாதே. எங்காவது ஒரு இடத்துக்கு போறது, அங்க போயி கேவலப்படுத்துறது?

70 வருஷத்துல திருக்குவளையில் உன் சொத்து என்ன? ஓபன் ஸ்டேட்மெண்ட் குடு. அன்னைக்கு திருட்டு ரயில்ல ஏறி வந்தார் ஐயா. அன்னைக்கு டிக்கட் 5 ரூபாய். 5 ரூபாய் இல்லாம வந்த குடும்பத்துக்கு இப்போ என்ன சொத்து? நல்ல ஆம்பளையா இருந்தா என் ஊருக்கு வா.. என்ன மிரட்டுறே..? என்றெல்லாம் தெறிக்க விட்டார் ராஜேந்திர பாலாஜி.

இதனால் கடுப்பான மு.க.ஸ்டாலின், ராஜேந்திர பாலாஜி ஒரு பபூன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவர் சிறைக்கு செல்வது உறுதி. ஒவ்வொரு வழக்கிற்கும் ஒவ்வொரு ஆண்டு சிறை என்றாலும் அவர் 10 வழக்குகளில் 10 ஆண்டுகள் சிறையில் இருப்பார்’’ என்றெல்லாம் இருவரும் மாறி மாறி பேசி தெறிக்கவிட்டனர்.

இந்நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ராஜேந்திர பாலாஜி ஸ்டாலின் நிர்வாகத்தை பாராட்டினார். அது தன் மீது வழக்குகள் பதியப்படலாம் என்கிற அச்சத்திலோ என்னவோ..? ஆனால் இப்போது ராஜேந்திர பாலாஜியை ஒரு மாதமாக தலைமறைவாக இருக்க வைத்து, சிறைக்கும் அனுப்பி சின்னாபின்னமாக்கி விட்டது திமுக. இந்த கடுப்பில் திமுகவை இன்னும் ஆக்ரோஷமாக விமர்சிப்பார் அவர் என்கிறார்கள் ராஜேந்திர பாலாஜியின் ஆதரவாளர்கள்.  

’’ராஜேந்திர பாலாஜிமீது போடப்பட்ட வழக்கு பொய்யானது. எந்தவித ஆதாரமும் இல்லாதது. அதை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம். விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் இதேபோல 21 பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதையெல்லாம் விசாரணை செய்யவும், அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களைக் கைது செய்யவும் ஆர்வம் காட்டாத போலீஸார், தி.மு.க அரசின் உத்தரவிற்கிணங்க ராஜேந்திர பாலாஜியை வேண்டுமென்றே கைதுசெய்து அண்ணனை சீண்டிப்பார்த்து விட்டது. ராஜேந்திர பாலாஜி மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசக்கூடியவர்.

சில நேரங்களில் கோபத்தில் அருவருக்கத்தக்க வார்த்தைகளையும் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். அவற்றை மறுப்பதற்கில்லை. கடந்த ஆண்டு தொண்டாமுத்தூரில் தி.மு.க தலைவர் ஸ்டாலினை மேடையில் கடுமையாக விமர்சித்ததால்தான் ராஜேந்திர பாலாஜி மீது கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. 

திமுகவினர் இனிமேல்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். சும்மா சொல் அடிப்பார். ஒவ்வொரு வார்த்தையாலும் நீங்கள் செய்த, செய்து கொண்டிருக்கின்ற அத்தனை தவறுகளையும் சொல்லி அடிப்பார். இந்த கைதில் உச்சநீதிமன்றம் ராஜேந்திர பாலாஜிக்கு ஆதரவாக தமிழக அரசை கடிந்து கொண்டுள்ளதும் அண்ணனுக்கு தெம்பை கொடுத்துள்ளது. ஆகையால் அண்ணன் அடங்கிப் போக மாட்டார். மீண்டும் அதிரடி காட்டுவார்’’ என்கிறார்கள்.

click me!