Rajendra Balaji: எப்ப வருவாரு எப்படி வருவாறு தெரியாது.. வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா KTR வருவாரு.. ராஜவர்மன்.!

By vinoth kumarFirst Published Dec 31, 2021, 8:19 AM IST
Highlights

ராஜேந்திர பாலாஜியும் நீங்களும் நெருக்கமானவர்கள்தானே. அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி உள்ளது? அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விசாரித்தார்கள். கடந்த 17-ம் தேதி விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் காரில் கிளம்பிச் சென்றார். அவருடன் நாங்கள் யாரும் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவரும் எங்களுடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. 

மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தெரிவித்துள்ளார். 

ஆவினில் அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்த வழக்கில் மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர்கள் உட்பட 4 பேர் மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, ராஜேந்திர பாலாஜி தரப்பில் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், கடந்த டிசம்பர் 17-ம் தேதி அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து சினிமா பாணியில் வெவ்வேறு கார்களில் மாறி மாறி சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  அவரை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக தேடப்பட்டு வருகிறார். கேரளா, பெங்களூரு, சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தனிப்படை முகாமிட்டுள்ளனர். மேலும், 600க்கும் மேற்பட்ட போன் அழைப்புகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் தர்மபுரி, திருப்பத்தூரில் ராஜேந்திரபாலாஜி பதுங்கியிருப்பதாக தகவல் பரவியது. திருப்பத்தூரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி அந்த மாவட்டத்தை சேர்ந்த ஜோலார்பேட்டை அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் விக்னேஷ்வரன், கோடியூர் இளம்பெண்கள் பாசறை நகர செயலாளர் ஏழுமலை ஆகியோரை பிடித்து விசாரணை நடத்தி கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜி விமானம் மூலமாக வெளிநாடுகளுக்கு தப்பி செல்வதை தடுக்க அவருக்கு எதிராக கடந்த 23ம் தேதி லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த சாத்தூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன், உதவியாளர் சீனிவாசபெருமாள் ஆகியோரிடம் மதுரை சரக டி.ஐ.ஜி காமினி, விருதுநகர் மாவட்ட எஸ்.பி மனோகரன் ஆகியோர் 3 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடத்தினர். இதனையடுத்து, விசாரணைக்கு நிறைவுக்கு பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ராஜவர்மன்;- ராஜேந்திர பாலாஜியும் நீங்களும் நெருக்கமானவர்கள்தானே. அவருக்கும் உங்களுக்குமான தொடர்பு எப்படி உள்ளது? அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? என்றெல்லாம் விசாரித்தார்கள். கடந்த 17-ம் தேதி விருதுநகரில் நடந்த ஆர்ப்பாட்டம் முடிந்ததும் அவர் காரில் கிளம்பிச் சென்றார். அவருடன் நாங்கள் யாரும் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவரும் எங்களுடன் போனில் தொடர்பு கொள்ளவில்லை. அவர் எங்கே இருக்கிறார் என்று எங்களுக்குத் தெரியவில்லை. 

நாங்களும் அவர் எங்கே இருக்கிறார் எனத் தேடிக் கொண்டுதான் இருக்கிறோம். ராஜேந்திர பாலாஜி மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொண்டு, தான் நிரபராதி என்பதை நிரூபிப்பார். அவர் உடல் நிலை சரியில்லாதவர். அதனால், முன்ஜாமீன் வாங்குவதற்கு முயற்சிக்கிறார். இது என்ன கொலை வழக்கா? அல்லது, வேறு எதுவும் கொடூர வழக்கா?  ஏதோ அவர் மேல வழக்கு போட்டிருக்காங்க. நீதிமன்றத்தில் போராடி கண்டிப்பாக வெற்றி பெறுவார்.  ராஜேந்திரபாலாஜி வரவேண்டிய நேரத்தில் வருவார். கண்டிப்பாக அதில் எந்தவித மாற்றமும் இல்லை. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை. எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என ராஜவர்மன் தெரிவித்துள்ளார்.

click me!