தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி சமூக நீதி ஆட்சி… முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!!

By Narendran SFirst Published Dec 30, 2021, 9:34 PM IST
Highlights

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக இருக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சியில் நடைபெற்ற விழாவில் திருச்சி மாநகரில் நவீனப்படுத்தப்பட்ட சத்திரம் நகர பேருந்து நிலையம், கால்நடை மருந்தக கட்டடங்கள், மாணவிகளுக்கான தங்கும் விடுதிகள், திருச்சி கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் ரைபிள் கிளப், மலைக்கோட்டை ஒளிரும் மின் விளக்குகளுடன் அழகுப்படுத்தப்பட்ட பணிகள், தரம் உயர்த்தப்பட்ட தார்சாலை பணிகள், மருங்காபுரி வட்டாரத்துக்கான ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்கமையம், மன்னார்புரத்தில் மண் பரி சோதனை ஆய்வகம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் நாகமங்கலம் ஓடைத்துறையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளிட்ட ரூ.153 கோடியே 22 லட்சம் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

மேலும், பஞ்சப்பூரில் புதிதாக அமைய உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்திற்கான அடிக்கல் நாட்டினார். அதற்காக முதல் கட்டமாக ரூ.350 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 28 அரசுதுறைகளின் மூலம் 45 ஆயிரத்து 344 பயனாளிகளுக்கு ரூ.327 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த விழாவில் மொத்தம் ரூ.1,084 கோடியே 80 லட்சம் மதிப்பிலான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். பின்னர் பேசிய அவர், திருச்சி மாநகராட்சியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

பொதுமக்களின் மனுக்கள் மீது 100 % சதவீதம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசிடம் கோரிக்கை வைத்தால் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.  பொதுமக்கள் திமுக அரசு மீது வைத்துள்ள நம்பிக்கை காப்பாற்றப்படும். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பெரியார் விரும்பிய சமூக நீதி ஆட்சியாக இருக்கும். தமிழ்நாட்டில் தான் வேளாண்மைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. தொழில் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் பொருளாதாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்கும் கொடுக்கப்படுகிறது. கடும் நிதி நெருக்கடியிலும் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன என்று தெரிவித்தார். 

click me!