
ஜெயலலிதா கோலோச்சிய அரசியல் காலத்தை கவனித்தவர்கள் அந்த உத்தரவை மறந்திருக்கவே முடியாது. அதாவது, அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமாக இருந்த நிலையில் ஜெயலலிதா திடீரென ஒரு நாள் ஒரு அதிரடி உத்தரவு அறிக்கையை தன் கட்சியினருக்கு தட்டிவிட்டார். அதன்படி பிளக்ஸ் பேனர்கள், விளம்பரங்கள் ஆகியவற்றில் தனது படத்தையும், எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோரின் படங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பேனர் வைக்கும் நபர்கள் தங்களின் போட்டோக்களை அதில் பயன்படுத்த கூடாது! பெயர்களை மட்டுமே போட்டுக் கொள்ள வேண்டும்! என்று விளக்கியது அந்த உத்தரவு. இந்த உத்தரவை தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கூட ‘என்ன ஒரு சர்வாதிகார உத்தரவு! காசு செலவு பண்ணி விளம்பரம் தருபவன், தங்கள் தலைவியின் போட்டோவின் கீழே தன் போட்டோவை சின்னதாக போட்டுக் கொள்ளும் ஜனநாயக உரிமை கூட கிடையாதா?’ என்று வேட்டு கொளுத்தினர். ஆனால், அ.தி.மு.க.வினரோ அந்த உத்தரவுக்கு வாய்மூடி தலையாட்டிவிட்டு, ‘அம்மாவின் பெயருக்கு கீழே எங்களின் பெயரை போட்டுக் கொள்ள சம்மதம் தந்ததே நாங்கள் செய்த புண்ணியம் புரட்சித் தலைவியே!’ என்று குனிந்து வணங்கினர்.
ஜெயலலிதா அப்பல்லோவில் ஐக்கியமாகும் காலம் வரையில் அந்த உத்தரவை அம்சமாக கடைபிடித்தனர் அ.தி.மு.க.வினர். ஜெ., மறைவு, சசியின் எழுச்சி பின் வீழ்ச்சி என்றெல்லாம் நிகழ்ந்து - இதோ கடந்த சில வருடங்களாக அ.தி.மு.க ’இ.பி.எஸ்.’ என்று பிராண்ட் ஆகிவிட்ட எடப்பாடியாரின் நிர்வாகத்தின் கீழ் இயங்குகிறது. என்னதான் மாஜி முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்றாலும் கூட, இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடியாரின் கையில்தான் லகான்! இருக்கிறது என்பதை தேசமறியும். அ.தி.மு.க.வின் முகமாகவே எடப்பாடியார் ஆகிக் கொண்டிருக்கிறார்! என்பதே உண்மை. இதை மெய்ப்பிக்கும் விதமாக ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதாவது 2022 வருடத்துக்கான மெகா சைஸ் காலண்டர் ஒன்றை தயாரித்துள்ள அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர், அதை எடப்பாடியாரிடம் காண்பித்து ஆசி பெற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் வெளியாகி அக்கட்சிக்குள் கன்னாபின்னா உஷ்ணத்தை கிளப்பியுள்ளன. அதாவது அந்த காலண்டரில் எடப்பாடியாரின் படம் மிக மிகப்பெரியதாக இருக்கிறது.
ஜெயலலிதாவின் போட்டோ சிறியதாகவும், எம்.ஜி.ஆர். அதைவிட சிறியதாகவும், அண்ணாவோ இருப்பதிலேயே குட்டியூண்டு போட்டோவிலும் ஒப்புக்கு இருக்கிறார்கள். கழக ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.ஸின் போட்டோவே இல்லை. இதை சுட்டிக்காட்டும் அ.தி.மு.க.வின் சீனியர்களும், நடுநிலை விசுவாசிகளும் “ எப்படியிருந்த இயக்கம் இன்று எப்படியாகிவிட்டது? அம்மா அவர்கள் இன்று உயிரோடு இல்லைதான். ஆனால், அம்மாவின் பெயரைச் சொல்லாமல் இவர்களால் ஒரு ஓட்டு வாங்க முடியுமா? அப்பேர்ப்பட்ட மனுஷியின் போட்டோவை ஏதோ ஒப்புக்கு வைப்பது போல் தம்மாதுண்டுக்கு வைத்துள்ளனர்.” என்று ஆதங்கப்படுகின்றனர். தி.மு.க.வின் ஐ.டி.விங் டீமோ “ஓஹோ எடப்பாடி நடிக்கும் படத்தில் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். எனும் மெகா நடிகர்களெல்லாம் துணை நடிகர்கள் போல.’ என்று கலாயத்துள்ளனர்.
இந்த போட்டோவுக்கு சசிகலாவின் ரியாக்ஷனை தமிழகமே எதிர்பார்க்கிறது! தியாக தலைவி நீங்க எங்கே இருக்கீங்க?....