
முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வரவேற்றார்.
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிமுக சார்பில் நேற்று திருப்பத்தூர், ராணிப்பேட்டையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். இதனையடுத்து, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்த சாத்தூர் வழியாக எடப்பாடி பழனிசாமி சென்றார்.
அப்போது, சாத்தூர் அருகே வெங்கடாசலபுரம் சந்திப்பில் எடப்பாடியை பழனிசாமியை விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் மாவட்ட கழக நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து, சால்வை அணிவித்த பின் யாரும் எதிர்பாராத விதமாக ராஜேந்திர பாலாஜி எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்து ஆசிப்பெற்றார். பின்னர், மேளதாளங்கள் முழங்க விருதுநகர் ராமர் கோவில் சார்பாக பூரண கும்ப மரியாதை கொடுக்கப்பட்டது.