இது சாதிவெறியர்களுக்கு துணைபோகும் போலீஸ்.. கூட்டணிக்குள் வெடி வைத்த திருமாவளவன்.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2021, 12:30 PM IST
Highlights

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல்படுத்தும் ஒரு போதும் அச்சப்படுத்தாது என எழுதப்பட்டுள்ளது. 

சேலம் மாவட்டம் மோரூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்ற தடைவிதித்து விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் மீது  தடியடி நடத்திய காவல்துறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆளும் திமுக கூட்டணியில் இருந்து வரும் நிலையிலும் காவல்துறைக்கு எதிராக அவர் இந்த போராட்டம் அறிவித்திருப்பது அரசியல் கலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களைப் பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி 4 இடங்களில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்துள்ளது. திமுகவில் முக்கிய கூட்டணி கட்சிகளின் ஒன்றாகவும் விசிக இருந்து வருகிறது. மத்திய அரசுக்கு எதிராக திமுகவை காட்டிலும் மிகத் தீவிரமாக விசிக தலைவர் தொல் .திருமாவளவன் செயல்பட்டு வருகிறார், பெரியாரிய, அம்பேத்கரிய கருத்துகளை தயங்காமல் மேடைதோறும் முழங்கிவரும் அவர் திமுகவை காட்டிலும் பாஜகவை எதிர்ப்பதில் மூர்க்கமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம் மோரூர் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்ற அக்கட்சித் தொண்டர்கள் முயற்சித்தபோது அங்கிருந்த போலீசார் அதற்கு தடை விதித்ததுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது. 

அங்கிருந்த மேல்தட்டு சாதியினருக்கு போலீஸ் துணை போனதாகவும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் குற்றச்சாட்டியுள்ளார். இது குறித்து தனது ஆதங்கத்தை பதிவு செய்திருந்த திருமாவளவன் பொது இடங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்றுவது பெரும் சவாலாக இருந்து வருகிறது, சேலம் மாவட்டம்  மோரூரில் பேருந்து நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடியை ஏற்க அங்கிருந்த சில சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு துணை போகும் வகையில் அங்கிருந்த காவல்துறையினர் விடுதலை சிறுத்தைகள் கொடியேற்ற தடை விதித்ததுடன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களையும் கடுமையாக தாக்கியுள்ளனர். விசிக கொடி ஏற்ற தடை விதித்து சட்டம் ஒழுங்கை சிக்கலாக்கியதுடன் விசிக தொண்டர்கள் மீது தடியடி நடத்தி சாதிவெறியர்களுக்கு துணைபோன, காவல்துறையின் தலித் விரோத போக்கை கண்டித்து வரும் 29-9-2021 புதன்கிழமை காலை 10 மணி அளவில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் எனது தலைமையில் நடைபெறும் என்றும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று அறிவித்துள்ளார்.

மோரூர் பேருந்துநிலையத்தில் விசிக கொடியேற்றத் தடைவிதித்து சட்டம்-ஒழுங்கு சிக்கலாக்கி, தடியடி நடத்தி, சாதிவெறியர்களுக்குத் துணைபோன காவல் துறையின் தலித்விரோதப் போக்கைக் கண்டித்து வரும் 29-09-2021 புதன்கிழமை காலை 10 மணியளவில் மாபெரும் எனது தலைமையில் நடைபெறுகிறது. pic.twitter.com/DztmyS5o1q

— Thol. Thirumavalavan (@thirumaofficial)

 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின்  தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள புகைப்படத்தில், ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசபடுத்தும் அரசியல்படுத்தும் ஒரு போதும் அச்சப்படுத்தாது என எழுதப்பட்டுள்ளது. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருந்து வரும் நிலையிலும், கைது செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்களை விடுவிக்குமாறு காவல் உயரதிகாரிகள் மற்றும் ஆளுங்கட்சி எம்எல்ஏவிடம் பேசியும் பலனில்லை என்று தனது ஆதங்கத்தை நேற்று அவர் பதிவு செய்திருந்த நிலையில் இந்த போராட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது விசிக திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

click me!