#BREAKING அக்டோபர் 1-ம் தேதி முதல் அரசு ஏ.சி. பஸ்கள் இயக்கப்படும்... அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவிப்பு..!

By vinoth kumarFirst Published Sep 24, 2021, 11:22 AM IST
Highlights

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 702 ஏ.சி. பேருந்துகள் உள்ளன. ஒரு ஏ.சி. பேருந்தின் விலை சுமார் ரூ.24 லட்சமாகும். இந்த பேருந்துகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன. கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரத்தில் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 

கொரோனா அதிகரிப்பால் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி. பேருந்துகள் மீண்டும் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தில் 702 ஏ.சி. பேருந்துகள் உள்ளன. ஒரு ஏ.சி. பேருந்தின் விலை சுமார் ரூ.24 லட்சமாகும். இந்த பேருந்துகள் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வாங்கப்பட்டு அரசு போக்குவரத்துக் கழகத்தில் சேர்க்கப்பட்டன. கொரோனா காரணமாக கடந்தாண்டு மார்ச் கடைசி வாரத்தில் தமிழகத்தில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. ஏ.சி., அறைகளில் இருப்பவர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பிருந்ததால் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படவில்லை. கொரோனா 2-ம் அலை பரவியபோது சில மாதங்கள் பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. பின்னர் பரவல் குறைந்ததால் பொதுப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. அப்போதும் ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படவில்லை.

இதனால் புதிதாக வாங்கப்பட்ட ஏ.சி., பேருந்துகள் கடந்த 18 மாதங்களாக இயக்கப்படாமல் டெப்போக்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பராமரிப்பு இல்லாமல் ஒரே இடத்தில் நிறுத்தி வைத்திருப்பதால் பேருந்தும், அதில் உள்ள ஏ.சி., இயந்திரமும் பழுதடைந்து வருகின்றன. ஏ.சி. பேருந்துகளில் தினமும் ஒரு பேருந்துக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வருவாய் கிடைத்தது. அந்த வகையில் 702 பேருந்துகளுக்கும் சேர்ந்து தினமும் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு ரூ.75 லட்சம் முதல் ரூ.1.25 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா பரவல் தற்போது கட்டுக்குள் வந்ததையடுத்து, வருவாய் இழப்பையும் சரி கட்ட வேண்டும் என்றால் ஏ.சி., பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கையும் எழுந்தது. இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல் ஏ.சி., பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. 

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்;- அக்டோபர் 1-ம் தேதி முதல் மாவட்டங்கள், மாநிலங்களுக்கிடையே அரசு போக்குவரத்தை சார்ந்த 702 ஏ.சி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. கொரோனா அதிகரிப்பால் மே 10 முதல் நிறுத்தப்பட்ட அரசு ஏ.சி பேருந்துகள் மீண்டும் இயக்கப்படுகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி அரசு போக்குவரத்துக் கழகத்தைச் சார்ந்த 702  ஏ.சி. பேருந்துகள் இயக்கப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகரில் 48 குளிர்சாதன பேருந்துகளும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் (SETC) சார்பாக 340 குளிர்சாதனப் பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

click me!