அய்யய்யோ இங்கு பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. சுவேதா கொலையால் நொறுங்கிப்போன நடிகர் சரத்குமார்.

By Ezhilarasan BabuFirst Published Sep 24, 2021, 10:08 AM IST
Highlights

பொது இடங்களில், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இது போன்ற தொடர் கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்.

மாணவி ஸ்வேதாவை கொலை செய்த கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என அகில இந்திய சமத்திவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தனியார் கல்லூரியில், லேப் டெக்னீசியன் பயின்று வந்த ஸ்வேதா என்ற மாணவியை தாம்பரம் கிழக்கு பகுதி ரயில் நிலையம் அருகில் ராமச்சந்திரன் என்பவர் படுகொலை செய்த சம்பவம் நெஞ்சை பதறச் செய்வதுடன், மிகுந்த மன வேதனையளிக்கிறது. சென்னை புறநகரில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடத்தில், பகலில் இது போன்று கொலை செய்யும் சூழல் சுவாதி முதல் ஸ்வேதா வரை தொடர்ந்து வருவது, பெண்களின் பாதுகாப்பற்ற நிலையை காட்டுகிறது. 

பொதுவெளியில் மக்களின் பாதுகாப்பு கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியது அரசின் கடமை என்பது ஒருபுறம் இருந்தாலும், தனி மனித வாழ்வியல் முறையில், ஒருவர் மற்றவர் மீது அதிகாரத்தையும், வலுக்கட்டாயமாக ஆசைகளையும் திணிக்கக்கூடாது என்ற அடிப்படைக் கல்வியை பெறாததே இது போன்ற குற்ற செயல்களுக்கான காரணமாக கருதுகிறேன். பொது இடங்களில் அரசு மேற்கொள்ளும் பாதுகாப்பு நடவடிக்கைகள் போன்று பள்ளி, கல்லூரிகள் அருகேயும் இனி பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. சமூகத்தை காவல்துறையினர் கண்காணிப்பது போன்று, குடும்பத்தில் பெற்றோர்கள் பிள்ளைகளை  கண்காணிக்க வேண்டும். அவர்களது எண்ண ஓட்டங்களையும், செயல்பாடுகளையும் ஆராய்ந்து நல்வழிப்படுத்துவது பெற்றோரின் கடமை.

பொது இடங்களில், பெண்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இது போன்ற தொடர் கொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கொலையாளிக்கு கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும். விசாரணையின் போது, கொலையாளியின் குடும்பத்தாரும் இச்செயலுக்கு உறுதுணையாக இருந்தார்கள் என தெரிய வருமேயானால், அவர்கள் மீதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்த மாணவி ஸ்வேதாவின் குடும்பத்தார்க்கு, கொலையாளியின் குடும்பத்தாரிடம் இருந்து உரிய இழப்பீடு பெற்று தர வேண்டும். ஆற்றொணா துயரத்துடன், மாணவி ஸ்வேதாவின் குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
 

click me!