
சமீபகாலமாக தலை எது? கால் எது? என புரியாமல் சினிமாவில் குட்டிக்கரணம் அடிப்பது போன்று உளறி கொட்டி வருகிறார் டி.ராஜேந்தர்.
ஜல்லிக்கட்டு போரட்டத்துக்கு பிறகு அவருடைய பேச்சே வேறு மாதிரி உள்ளது.
ஏதோ தன்னாலும் தன் மகன் சிம்புவாலும் மட்டுமே இவ்வளவு பெரிய போராட்டம் நடந்தது என்பது போல பேசி வருகிறார் டி.ஆர்.
லதிமுக என்னும் கட்சியை நடத்தி வரும் அவர் தற்போதைய சூழ்நிலையில் அதிமுக ,திமுகவுக்கு 234 தொகுதிகளிலும் மாற்று தான்தான் என்று சொன்னதுதான் செம காமெடி.
பிரஸ் மீட் வைத்துவிட்டு நேரடியாக விசயத்துக்கு வராமல் தொடர்ந்து தன் மகன் சிம்புவின் புகழ் பாடுவதும், தான் ஒன்றும் ஜமீன்தார் வீட்டு பையன் இல்லை, ஆனாலும் இவ்வளவு உயரத்துக்கு வந்துள்ளேன் என்று பெருமையாக கூறிக்கொள்வதையும் தொடர்ந்து செய்து வருகிறார்.
இந்நிலையில் டி.ராஜேந்தர் தரப்பு குறித்து கேள்வி எழுப்பிய நிருபரை 'யோவ்' என்று ஒருமையில் அநாகரீகமாக பேசினார்.
இன்று சென்னையில் செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த டி.ஆர் தரப்பினர் அதிக பத்திரிகையாளர்களை வரவைக்க "அதிரடி செய்தியை சொல்லவிருக்கிறார் டி.ஆர்" என்று முட்டாள்தனமான ஒரு கருத்தை வேண்டுமென்றே பதிவிட்டு செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பியிருந்தனர்.
சுமார் அரை மணி நேர பிரஸ் மீட் முடிந்த பிறகு முக்கியமான அதிரடியான அறிவிப்பு எதையும் சொல்லாமல் டி.ஆர் முடித்து கொண்ட போது தெளிவான நிருபர் ஒருவர் "அதிரடி கருத்தை வெளியிடப் போகிறேன் என எங்களை அழைத்தீர்கள். ஆனால் அது போல எதுவும் சொல்லவில்லையே" என கேள்வி எழுப்பினார்.
செய்தியாளரின் நேர்மையான கேள்விக்கு நேரமான முறையில் பதிலளிக்காமல் தலை கால் புரியாமல் எகிறி குதித்தார் டி.ஆர்.
அதில் உச்சமாக இவர் அழைப்பு விடுத்து வந்த செய்தியாளரை நோக்கி கன்னாபின்னாவென்று பேசினார்.
'யோவ்' என்றும் 'வேறு யாரிடமாவது சென்று உன்னால் இப்படி கேட்க முடியுமா' என்றும் ஒருமையில் பேசினார்.
மேலும் 'நான் ஒன்றும் ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மகன் இல்லை. சாதாரண குடும்பத்தில் இருந்து கஷ்டப்பட்டு இவ்வளவு உயரத்துக்கு வந்த என்னை பாராட்டாமல் இப்படி கேட்கிறீர்கள்' என்று சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசினார்.
கேள்வி கேட்ட நிருபரை எவ்வளவு அசிங்கபடுத்த முடியுமோ அவ்வளவு அசிங்கப்படுத்தினார்.
இதை அங்கு கூடியிருந்த பத்திரிக்கையாளர்கள் எதிர்த்து கேள்வி கேட்காமல் வேடிக்கை பார்த்தனர்.
இதே போன்று ஒரு சம்பவம் டெல்லியிலோ அல்லது கேரளாவிலோ நடந்திருந்தால் அத்தனை பத்திரிக்கையாளர்களும் புறக்கணித்திருப்பார்கள்.
காரணமே இல்லாமல் ஒரு பத்திரிகையாளரை கேவலப்படுத்துபவர் எவ்வளவு பெரிய விவிஐபி ஆக இருந்தாலும் பாடம் புகட்டி விடுவார்கள் மற்ற மாநில பத்திரிக்கையாளர்கள்
நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்த போது தாமதமாக வந்ததற்கே அத்தனை பத்திரிக்கையாளர்களும் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.
இத்தனைக்கும் அவர் நிதியமைச்சராக இருந்தவர்,
அந்த ஒற்றுமை தமிழக பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இல்லாதது நிச்சயம் ஒரு வேதனையான விசயமே.