
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் மற்றும் அப்பாவி ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த இரக்கமற்ற கொலையாளி ராஜபக்சேவுக்கு சிங்கள மக்கள் எழுதிய தீர்ப்பு இது என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராஜபக்சே வீடு தீக்கிரையாக்கப்பட்டுள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த் இவ்வாறு வீடியோ வெளியிட்டு தனது மன திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்திற்கும் இடையே நடந்த உள்நாட்டுப் போரில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். தமிழ் இனத்தை அழிக்க வேண்டும் என்ற முனைப்பில் ராஜபக்சே மற்றும் அவரது சகோதரர்கள் சர்வதேச நாடுகளின் உதவியுடன் கொத்துக் குண்டுகளைப் போட்டு தமிழர்களை கொத்துக் கொத்தாக கொன்று குவித்தனர். ஒட்டு மொத்த உலகமும் அதை அன்று கைகட்டி வேடிக்கை பார்த்தது. போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டுமென சர்வதேச அளவில் பரவிக்கிடக்கும் தமிழர்கள் இன்றளவும் கண்ணீர் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஜெனிவாவில் இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனாலும் தமிழர்களுக்கு நடந்தது இனப்படுகொலை என கூற ஐக்கிய நாடுகள் தயங்குகின்றன.
தமிழர்களின் கண்ணீர் தமிழர்களின் துயரம் நிச்சயம் ஒருநாள் ராஜபக்சேவையும் அவரது குடும்பத்திற்கு தண்டனை தேடித்தரும் என்ற சாபம் தமிழர்கள் விடுத்து வருகின்றனர். இந்நிலையில்தான் வரலாறு காணாத பஞ்சத்திற்கு இலங்கையின் தள்ளப்பட்டுள்ளது. ராஜபக்சே அவரது குடும்பத்தினரின் தவறான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக எதேச்சதிகாரத்தின் காரணமாகவும் அந்நாடு கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்நாட்டு மக்கள் உண்ண உணவின்றி தவித்து வருகின்றனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டுமென தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்களின் போராட்டத்திற்கு செவிமடுக்காமல் ராஜபக்ச குடும்பம் அதே ஆணவத்தோடு இருந்து வந்தது. இந்நிலையில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டு ராஜபக்சேவின் சொகுசு மாளிகை தீவைத்து எரித்துள்ளனர். ஒட்டுமொத்த ராஜபக்ச குடும்பம் தலைமறைவாகி உள்ளது திரும்பிய பக்கமெல்லாம் இலங்கையில் கலவரமாக காட்சியளிக்கிறது. இந்நிலையில் இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது மனத் திருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
உலகம் முழுவதும் வாழும் நமது தமிழ் அன்பு சொந்தங்களுக்கு கேப்டன் சார்பாகவும், தேமுதிக சார்பாகவும் பணிவான வணக்கங்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழினத்தை படுகொலை செய்த இரக்கமற்ற ராஜபக்சவிற்கு கிடைத்த இந்த தண்டனை இறைவன் கொடுத்த தீர்பாக்கவே இந்த நாளை நான் பார்க்கிறேன். ஒரு இனத்திற்காக போராடிய நமது அன்பு சகோதரர் போராளி பிரபாகரன் அவர்களையும், அவரது குடும்பத்தினரையும் அப்பாவி தமிழீழ மக்களையும் படுகொலை செய்த தமிழ் இனத்தையே அழித்த ராஜபக்சே இன்று அந்த சிங்கள மக்களாலேயே தாக்கப்படும் காட்சிகளை நாம் பார்க்கிறோம்.
இன்றைக்கு தான் உண்மையிலேயே தமிழ் மக்கள் வெற்றி பெற்றதாக நான் கருதுகிறேன். விடுதலைப் புலிகள் பிரபாகரன் அவர்களுடைய படுகொலையையும் அப்பாவித் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்தி கொலை, கொள்ளை, பலாத்காரம் செய்து பல வழிகளில் அவர்களை கொடுமைப்படுத்தி கொலை செய்த ராஜபக்சேவுக்கு சிங்கள மக்களே தீர்ப்பு கொடுத்திருப்பதை அனைவரும் வரவேற்கக் கூடிய ஒரு விஷயம். அன்று ஈழ மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி வயிறு எரிந்து சாபம் விட்டார்களோ அதன்படிதான் இன்று ராஜபக்சேவின் கொடுமையான ஆட்சியும் இலங்கையும் தீப்பற்றி எரிகிறது. இன்றைக்கு தான் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்கும் மற்றும் தமிழ் ஈழமக்களின் ஆத்மாவும் சாந்தி அடைந்திருக்கும். இந்த வெற்றியை உலக நாடுகளில் இருக்கும் அனைத்துத் தமிழ்ச் சொந்தங்களுக்கும் கிடைத்த வெற்றியாக கருதுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.