
ரயிலில் கழிப்பறை அசுத்தமாக உள்ளது தொடர்பாக டுவிட்டர் மூலம் ரயில்வே அமைச்சருக்கு புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் கழிப்பறை சுத்தம் செய்யப்பட்டது. இதனால் பயணிகள் வியப்பும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு, மதுரை, சேலம், தர்மபுரி வழியாகநாள்தோறும் இரவு, 7:10 மணிக்கு, எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலின், 'எஸ் - 3' பெட்டியில், ஜெகன் என்பவர் பயணம் செய்துள்ளார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் பயணம் செய்துள்ளனர்.
இந்த கோச்சில் உள்ள கழிப்பறை சரியாக சுத்தம் செய்யப்படாமல், துர்நாற்றம் வீசியது. மேலும் அந்த கழிப்பறையை யாரும் பயன்படுத்த முடியாத நிலை இருந்துள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த பெட்டியில் இருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த பயணி ஒருவர், கழிப்பறையை போட்டோ எடுத்து, பயணியர் ஆத்திரம் குறித்து, ரயில்வே அமைச்சர், பியுஷ் கோயலின் அதிகாரப்பூர்வடுவிட்டர் பக்கத்தில், இரவு, 8:00 மணிக்கு புகார் அளித்தார்.
இந்நிலையில், இரவு, 9:00 மணிக்கு, ரயில் திருநெல்வேலி வந்தடைந்தது. அங்கு ரயில் நின்றதும், தயாராக இருந்த துப்புரவு பணியாளர்கள், ஓடிவந்து கழிப்பறையை சுத்தம் செய்தனர்.
அடுத்த சில நிமிடங்களில், புகார் செய்தவரின், டுவிட்டர் கணக்கில், 'உங்கள் புகாருக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது என ரயில்வே அமைச்சரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
புகார் அளித்த ஒரு மணி நேரத்தில் ரயில்வே அமைச்சர் நடவடிக்கை எடுத்து கழிப்பறையை சுத்தம் செய்ததை அனைத்துப் பயணிகளும் பாராட்டி மகிழ்ந்தனர்