
‘தமிழகத்தில் நடக்கும் ஆட்சி மக்களிடம் பெரும் அதிருப்தியை சம்பாதித்து வருகிறது. பேருந்து கட்டண உயர்வு, எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசு பணத்தை தண்ணி மாதிரி செலவு செய்து, மக்களுக்கு இடையூறு கொடுப்பது என பல்வேறு புகார்கள். போதாதற்கு பிஜேபி இந்த ஆட்சியைக் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தபடி இருப்பது தமிழக மக்களிடம் பிஜேபிக்கு கெட்ட பெயரை உண்டாக்கிவருகிறது. இப்படியே போனால், தமிழகத்தில் பிஜேபி மீதான வெறுப்பு இன்னும் அதிகமாகும்’ என நினைக்கிறதாம் பாஜக மேலிடம். நடப்பதெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கும் மோடி மேலும் டென்ஷன் ஆனதாகச் சொல்கிறார்கள். எடப்பாடி அரசு மீது நடவடிக்கை எடுக்கலாமா? என ஆலோசனை நடந்திருக்கிறது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டமன்றம் தொடர்பாக நடக்கும் வழக்கு பற்றியும் விவாதம் போயிருக்கிறது.
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்த வழக்கு, ஓ.பி.எஸ். ஆதரவு எம்.எல்.ஏக்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கு, குட்கா விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கு என அனைத்திலும் விரைவில் தீர்ப்பு வந்துவிடும். எப்படியும் அந்த தீர்ப்பு எடப்பாடி அரசுக்கு எதிராகத்தான் வரும். அப்படி வரும் பட்சத்தில் அதையே காரணமாக வைத்து மளமளவென காய்கள் நகர்த்தப்பட்டு அமைச்சரவைக்கு மூடுவிழா தான்.
இதற்காக பல்வாரிலால் அரசு, அரசியல், பொதுநல மனிதர்கள், பொதுமக்கள் என பல தளங்களில் தனக்கென மிக நெருங்கிய நட்பு டீமை உருவாக்கிவிட்ட கவர்னர் ஆட்சி கலைப்புக்கு ரெடியாக இருக்கிறாராம்.
நடவடிக்கை என்றால் எதுவரை போகலாம் என சிலர் கேட்டார்களாம். இந்த ஆட்சி இருக்கக் கூடாது. ஆளுநரைப் பயன்படுத்தி இப்போதைக்கு நிர்வாகம் செய்யலாம் என்றும் சொல்லியிருக்கிறார்கள் ஆலோசனை சொன்னவர்கள். ஆக, தமிழகத்தில் பிப்ரவரியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்!”
இதற்க்கு முன், கிட்டத்தட்ட ஒரு மெகா அரசியல் ஆபரேஷனுக்கு தயாராகிவிட்டார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்! என்கிறார்கள் ராஜ்பவனின் உள் நடவடிக்கைகளை அறிந்தவர்கள். சிம்பிளாக சொல்வதென்றால் ‘ஆட்சி கலைந்தால், தமிழகத்தை ஆள நான் ரெடி!’ என்று பிரதமரிடம் வெளிப்படையாகவே கவர்னர் கூறிவிட்டார் என்றே தகவல்கள் வருகின்றன.
இப்படியான தகவல்களை தருபவர்கள் இன்னும் ஆழமாக பகிரும் கருத்துக்கள் இவைதான். அதாவது தமிழகத்தின் பொறுப்புக் கவர்னராக இருந்த வித்யாசாகர் விடுவிக்கப்பட்டு அந்த இடத்தில் புரோஹித் அமர்த்தப்பட்டதே, தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலையை சரிகட்டத்தானாம். ஆனால் அதை சட்டென்று எடுத்த எடுப்பில் செய்துவிட்டால் ’மாநில சுயாட்சி’ எனும் கொடியை பிடித்துக் கொண்டு எதிர்கட்சிகள் மட்டுமில்லாது ஆளுங்கட்சியும் பல சீன்களை நடத்தும், இதனால் பி.ஜே.பி.யின் மீது தமிழக மக்களுக்கும் பெரும் வெறுப்பு உருவாகும் என்பதே டெல்லியின் கணிப்பு. அதனால்தான் படிப்படியாக பன்வாரிலாலை முன்னேறிட சொல்லியிருக்கிறார்கள்.
பிரதமர் ஜஸ்ட் புள்ளிதான் வைத்தாராம், ஆனால் புரோஹித் படு பக்காவாக ரங்கோலி போட்டுக் கொண்டிருக்கிறார் என்கிறார்கள். கோயமுத்தூரில் துவங்கி பல மாவட்டங்களில் கவர்னர் ஆய்வு நடத்தியதே டோட்டலாக தமிழக அரசு நிர்வாகத்தின் பல்ஸை பிடித்துப் பார்க்கத்தான். அந்த வகையில் ஓரளவு கணித்துவிட்டாராம் சூழ்நிலையை. அதேபோல் மத்திய அரசு பணியிலிருந்த ராஜகோபாலை தனது அலுவலகத்துக்கு கவர்னர் மாற்றிக் கொண்டது எதிர்கால சூழலை மனதில் வைத்துத்தானாம். அதென்ன எதிர்கால சூழல்? என்று கேட்டால் அதற்கான பதில் சில வரிகள் தாண்டி உங்களுக்கு கிடைக்கும்.
கவர்னர் தனக்கும் தமிழுக்கும் இடையில் எந்த மீடியேட்டரையும் வைத்துக் கொள்ளாமல் தானே தமிழ் கற்று வருகிறார். இதன் உள்காரணம் என்னவென்றால் நாளை தமிழகத்தை முதலமைச்சர் போன்ற பொறுப்பிலிருந்து நடத்துகையில் மக்களின் பிரச்னையும், பேச்சுக்களும் தனக்கு தெளிவாக புரியவேண்டும் என்பதற்காகத்தானாம்.
அதேபோல் தமிழகமெங்கும் இருக்கும் அரசு உயரதிகாரிகள், காவல்துறை அதிகாரிகளில் ஆளுங்கட்சிக்கு ஆமாம் சாமி! போட்டுக் கொண்டிருக்கும் நபர்களின் லிஸ்டை துல்லியமாக எடுத்துவிட்டார். காரணம், நாளை தான் பொறுப்பை ஏற்று நடத்துகையில் பதவியிலிருந்து கொண்டு குழப்பம் ஏற்படுத்த எந்த அதிகாரியும் முனையக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம் பன்வாரிலால்.
ஆக இதையெல்லாம் கவர்னர் செய்து முடித்திருப்பதன் பின்னணியே ‘ஆட்சிக்கலைப்புக்கு அவர் ரெடி என்பதுதான்’ என்கிறார்கள். ஒரு மைனாரிட்டி அரசை ஆள விடுவதில் எதிர்கட்சிகளுக்கு எப்படி ஆதங்கம் உள்ளதோ அதே கோபம் கவர்னருக்கும் இருக்கிறதாம். ஆனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் சில அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கிவிட்டு கவர்னர் ஆட்சியை அமைக்கலாமென்று விரும்பினாராம். அதைத்தான் இத்தனை மாதங்கள் செய்திருக்கிறார் என்கிறார்கள்.
’ஆட்சி கலைக்கப்பட்டால் தமிழகத்தை தனிச்சிறப்புடன் ஆள்வதற்கு நான் தயார்’ என்பதை சமீபத்தில் பிரதமரை சந்தித்தபோது தெரிவித்துவிட்டார் கவர்னர் என்கிறார்கள். கவர்னர் சொன்ன அளவுக்கு சூழல் உருவாகிவிட்டதா என்பதை மத்திய உளவுத்துறை மூலம் பிரதமர் வட்டாரமும் உறுதிப்படுத்திக் கொண்டு விட்டதாம்.
ஆக இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது அடுத்த மாதம் தமிழக சட்டசபை முடக்கப்படலாம் என தெரிகிறது. எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து தமிழக சட்டசபை தேர்தலும் வரவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.