
அதிமுக சசிகலா அணியினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
ஆர் கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அதிமுக அம்மா கட்சி வேட்பாளர் தினகரன் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக அனைத்து கட்சிகளும் குற்றம் சாட்டி வருகின்றன.
இதையடுத்து வருமான வரித்துறையினர் சுகாராததுறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகம், புதுக்கோட்டை, இலுப்பூர் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்து வருகின்றனர்.
அதே போல் அதிமுகவில் இருந்து பிரிந்து தினகரனுடன் இணைந்துள்ள நடிகர் சரத்குமாரின் கொட்டிவாக்கம் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் எம்ஜிஆர் பல்கலை கழக துணை வேந்தர் கீதாலட்சுமியின் வீட்டிலும் சோதனை நடந்து வருகிறது.
அதேபோல் அதிமுக முன்னால் எம் பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இவர் கடந்த 2009ம் ஆண்டு எம்.பி. பதவிக்கு தென் சென்னையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாள்ர் டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் பா.ஜ.க சார்பில் இல.கணேசனை தோற்கடித்தார்.
எம்.பி. பதவியில் தேர்தெடுக்கப்பட்ட உடன் ஒரு கையெழுத்து போடுவதற்கு 50 ஆயிரம் ருபாய் பணம் பெற்றது குறித்த வீடியோ வெளிவந்ததால் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அவரை அதிமுகவில் இருந்து அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கினார்.
தற்போது ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட அவர் சுகாதாரத்துறை மற்றும் தேர்தல் சம்மந்தமான பணிகளை காண்ட்ராக்ட் எடுத்து நடத்தி வந்ததால் வருமான வரித்துறையினர் அவர்வீட்டில் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.