
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியானதையடுத்து தொகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 2000 ரூபாய் கள்ள ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர்
ஜெயலலிதா மறைந்ததையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 12 ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக இரண்டாக உடைந்ததையடுத்து தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்துள்ளது.
சசிகலா அணி சார்பில் தொப்பி சின்னத்தில் டி.டி.வி.தினகரனும், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், மின் கம்பம் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர்.
இந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் தரப்பினர், வரலாறு காணாத அளவுக்கு ஒரே நாள் இரவில் வாக்காளர்களுக்கு 128 கோடி ரூபாய் அளவுக்கு பண விநியோகம் நடைபெற்றதாக ஓபிஎஸ் அணி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
டி.டி.வி.தினகரன் தரப்பினர் பல்வேறு இடங்களில் பண விநியோகம் செய்தபோது கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுக்கள் கள்ள நோட்டு என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓட்டுக்காக வழங்கப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகளை கடைக்கு சென்று கொடுத்தபோது அவை கள்ள நோட்டுகள் என திருப்பி அனுப்பப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த ஆர்,கே.நகர் பொது மக்கள் ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு மாற்ற முடியாமல் திணறி வருகின்றனர். இப்படி கள்ள நோட்டுகளை கொடுத்து ஏமாத்திட்டாங்களே என புலம்பி வருகின்றனர்.