
புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் என தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் பாஜகவின் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கிய கிரண் பேடி, அரவிந்த் கெஜ்ரிவாலிடம் பரிதாபமாக தோற்றுப்போனார். இதையடுத்து அவர் புதுச்சேரி மாநில ஆளுநராக மத்திய அரசால் நியமிக்கப்பட்டார்.
கிரண் பேடி ஆளுநர் ஆனதில் இருந்தே முதலமைச்சர் நாராயணசாமிக்கும் அவருக்கும் இடையே கடும் பனிப் போர் நிலவி வருகிறது,
தற்போது இந்த மோதல் வெளிப்படையாகவே வெடித்துள்ளது. கிரண்பேடியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக முதலமைச்சர் நாராயணசாமி அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். சட்டசபையிலும் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றினார் நாராயணசாமி.
இதனால் கோபமடைந்த கிரண்பேடி நான் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் போன்று செயல்பட முடியாது என்றும் ,புதுச்சேரி என்பது ஒரு மாநிலம் கிடையாது என்றும் தெரிவித்தார். புதுச்சேரியில் முதலமைச்சரைவிட தனக்குத் தான் அதிக அதிகாரம் உள்ளது எனவும் கிரண் பேடி தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன். முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து பேசினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கிரண் பேடி கீழ்பாக்கத்தில் இருக்க வேண்டியவர் என்றும், அவர் புதுவை மாநிலத்தில் துணை நிலை ஆளுநராக வந்துள்ளார் என்றும் தெரிவித்தார். இளங்கோவனின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.