
அரசாங்கம் செய்யும் தவறுகளை, திரைப்படங்களில் காட்டி வருவது கடந்த 50 வருடங்களாக நடந்து வருவதாகவும், கருத்து சுதந்திரத்துக்கு எதிராக பாஜக செயல்படுவதாகவும் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
இயக்குநர் அட்லி எடுத்திருக்கும் திரைப்படம் மெர்சல். விஜய் மூன்று வேடங்களில் நடித்திருக்கும் இந்தப் படம், தீபாவளி அன்று ரிலீஸானது. இந்தப் படம், ரிலீஸாவதற்கு முன்பாகவே பல்வேறு சிக்கல்களைச் சந்தித்தது. படம் வெளியான பிறகும், படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்களால் தற்போது மெர்சல் படத்துக்கு சிக்கல் எழுந்துள்ளது.
பல எதிர்ப்புகளையும் மீறி தீபாவளி அன்று மெர்சல் படம் வெளியானது. வெளியான பின்னரும் மெர்சல் திரைப்படம் பல சர்ச்சைகளுக்கு ஆளாகி வருகிறது. காரணம், அப்படத்தில் மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்டி குறித்தும் பணமதிப்பிழப்பு குறித்தும் வசனங்கள் உள்ளன.
இந்த வசனங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. ஆனால் பாஜக மத்தியில் கடும் கொந்தளிப்பை பரிசாக
கொடுத்துள்ளது. மேலும் மெர்சல் படத்தில் இருந்து அந்த குறிப்பிட்ட வசனங்களை நீக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வந்தது. இந்த நிலையில் சர்ச்சைக்குரிய வசனங்களை நீக்க முடிவு செய்திருப்பதாக திரைப்பட குழுவினர் தெரிவித்திருந்தனர்.
மெர்சல் திரைப்படத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இந்த நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தி மெர்சலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார். மெர்சல் படத்தில் தலையிட்டு தமிழ் பெருமையை அழிக்க முயற்சிக்க வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் கருத்துக்கு எதிராக தமிழக பாஜகவினரும், ஆதரவாக தமிழக காங்கிரசாரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் பேசும்போது, அரசாங்கம் செய்யும் தவறுகளை, திரைப்படங்களில் கடந்த 50 வருடங்களாக நடந்து வருகிறது என்றார். இது கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். அனைவரிடமும் திரைப்படத்தை காட்டிய
பிறகா திரையிட முடியும் என்றும் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பினார்.