
மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு குறித்த தவறான தகவல்களை அளிக்கும் வசனங்களை நீக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் மெர்சல் திரைப்படத்தில் வரும் வசனங்கள் மக்களின் எண்ணங்களின் பிரதிபலிப்பே என்றும் அந்த வசனங்களை நீக்க வேண்டியதில்லை என்றும் திரையுலகினரும் சில அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், மெர்சல் படத்துக்கு ஆதரவாக டுவீட் செய்திருந்தார். அந்த டுவீட்டில், பராசக்தி திரைப்படம் இன்றைக்கு வெளியானால் விளைவு எப்படி இருக்கும்? என பதிவிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதமாக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பதிவிட்ட டுவீட்டில், இன்று பராசக்தி படம் வெளியானால் கோவில்கள் கொள்ளையர்கள் கூடாரம் ஆகக்கூடாது என்று மக்கள் அரசை கேவிலிலிருந்து(கோவிலிலிருந்து) வெளியேறறுவர்(வெளியேற்றுவர்) என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவில் கோவிலிலிருந்து என்பதற்குப் பதிலாக கேவிலிலிருந்து என பதிவிட்டுள்ளார். கோவில் என்ற வார்த்தையைக் கூட சரியாக எழுத தெரியவில்லை. இவர் மற்றவர்களை விமர்சனம் செய்கிறார். முதலில் சரியாக எழுத கற்றுக்கொள்ளுங்கள் என நெட்டிசன்கள் ராஜாவை வறுத்தெடுக்கின்றனர். வெளியேற்றுவர் என்ற வார்த்தையையும் கூட தவறாகவே ராஜா பதிவிட்டிருந்தார்.