
மெர்சல் திரைப்படம் என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு, அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் தமிழ் மொழியின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யவேண்டாம் மிஸ்டர் மோடி என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. திரைப்படத்துக்கான தலைப்பு, விலங்குகள் நல வாரிய பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்த இந்த படம், விஜய், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் முடிவுக்கு வந்ததது.
இத்தனைக்கும் பிறகு படத்தில் வரும் சில வசனங்களுக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை, டிஜிட்டல் இந்தியா போன்ற மத்திய அரசின் திட்டங்களை விமர்சனம் செய்வதாக குற்றம்சாட்டியுள்ள பாஜக தலைவர்கள், அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதனிடையே கருத்துரிமைக்கு எதிராக பாஜகவினர் செயல்படுவதாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மெர்சல் படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் மெர்சல் திரைப்படம் என்பது தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் ஆழமான வெளிப்பாடு, அந்த திரைப்படத்திற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் மூலம் தமிழ் மொழியின் பெருமையை மதிப்பிழக்கச் செய்யவேண்டாம் மிஸ்டர் மோடி என்றும் தெரிவித்துள்ளார்.
மெர்சலுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்துள்ள ராகுல் நேரடியாக மோடியை குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மட்டுமே பெரும் பிரச்சனையாக இருந்து வரும் மெர்சல், தற்போது இரு தேசிய கட்சிகளுக்கிடையே பெரும் மோதலை உருவாக்கியுள்ளது.