
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான மெர்சல் திரைப்படத்தில், ஜிஎஸ்டி வரிவிதிப்பு, டிஜிட்டல் இந்தியா ஆகிய மத்திய அரசின் திட்டங்களை விமர்சித்து இடம்பெற்றுள்ளன. இந்த வசனங்களை நீக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை எம்.பி இல.கணேசன், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஆகியோர் மெர்சல் திரைப்படத்தில் பொய்யான தகவலை மக்கள் மனதில் விதைக்கும் வகையிலான வசனங்களை நீக்க வேண்டும் கொந்தளிப்புடன் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு எச்.ராஜா அளித்த பேட்டியில் பேசியதாவது:
மற்றவர்களின் விமர்சனங்கள் என்னையும் அரசாங்கத்தையும் திருத்திக் கொள்ளப் பயன்படும் என பிரதமர் மோடியே சொல்லியிருக்கிறார். அந்த வகையில் விமர்சனங்களை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் மெர்சல் திரைப்படத்தில் மத்திய அரசு மீது மக்களுக்கு தவறான கண்ணோட்டத்தை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு பொய்யை சொல்லியிருப்பதைத்தான் எதிர்க்கிறோம்.
முதல் பொய்: 7% ஜிஎஸ்டி வசூலிக்கும் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம். ஆனால் 28% ஜிஎஸ்டி வரி வசூலிக்கும் இந்தியாவில் மருத்துவம் இலவசமில்லை என்ற வசனம். இதுவே பொய்தான். இந்தியாவில் அத்தியாவசியமான பொருட்களுக்கு வரி கிடையாது. அதிகமாக பயன்படுத்தப்படும் உணவுப் பொருட்களுக்கு 5% தான் வரி. 12% வரிவிதிப்பும் இருக்கிறது. அப்படி இருக்கையில் பொதுவாக 28% என்று கூறுவதே தவறு. அதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பதும் பொய்தான்.
இரண்டாவது பொய்: இந்தியாவில் மருத்துவம் இலவசம் இல்லை என்ற வசனம்.
இந்தியாவில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் இலவசம் தான். சென்னையில் இருக்கிற ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, பல தனியார் மருத்துவமனைகளைவிட சிறந்தது. விஜய் வந்து ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். அங்கு சிறந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மிகவும் ஆவேசத்தோடு, உயிர்காக்கும் மருந்துக்கு 12 சதவிகிதம் வரி; ஆனால், தாய்மார்களின் தாலியை அறுக்கிற சாராயத்துக்கு 0% வரி என வசனம் பேசுகின்றனர். இது பொய்யில்லையா? மத்திய வரி இருக்கட்டும்; வாட் வரி 58%லிருந்து 270% வரை சாராயத்துக்கு வரி இருக்கிறது.
ஜி.எஸ்.டி-க்குள் மதுவைக் கொண்டுவந்தால், 28% வரி மட்டுமே அதிகபட்சமாக விதிக்க முடியும். அதிக வரி விதிக்க வேண்டும் என்பதற்காகவே, மதுவை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டுவரவில்லை. இதை 0% வரி என்று எப்படிச் சொல்வது? வேண்டுமென்றே ஒரு பொய்யைப் பரப்புவதற்கு ஒருவர் முயற்சி செய்தால், அதைத் தட்டிக் கேட்க வேண்டுமா? இல்லையா? அதைத்தான் செய்திருக்கிறோம்.
விஜய்க்கோ கமல்ஹாசனுக்கோ அல்லது பல நடிகர்களுக்கோ இந்து மதத்தை விமர்சிக்க உரிமை இருக்கிறது. ஆனால் உண்மையின் அடிப்படையில் விமர்சனம் செய்ய வேண்டும். அவர்களுக்கு என்ன உரிமை கொடுக்கப்பட்டிருக்கிறதோ அதுபோன்றுதான் எனக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஆவேசமாக கூறினார்.