சேலம் திமுக பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வருகிறார் ராகுல்.. திமுக- காங் தொண்டர்கள் உற்சாகம்.

By Ezhilarasan BabuFirst Published Mar 25, 2021, 1:54 PM IST
Highlights

இந்நிலையில் தேர்தல் தேதி  நெருங்கி வருவதால், தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள, வரும் 28ஆம் தேதி ராகுல் காந்தி சென்னை வர உள்ளார். 28 ஆம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.  

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 28ஆம் தேதி சென்னை வருகை தர உள்ளார். இதற்கான அறிவிப்பை அக்காட்சி அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  இது காங்கிரஸ்-திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. அதை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. நாட்டின் பிரதான இரண்டு தேசிய கட்சிகளான காங்கிரஸ்- பாஜக ஆகிய இரு கட்சிகளும் திராவிடக் கட்சிகளான அதிமுக-திமுக தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர் கொள்கின்றன. 

அந்தவகையில் பாஜக அதிமுகவுடனும், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது. திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் 20 சட்டமன்ற தொகுதிகளை காங்கிரஸ் போராடி பெற்றுள்ளது. தற்போது 20 இடங்களுக்கான வேட்பாளர்களையும் அக்கட்சி அறிவித்து ஊர் ஊராக, வீதி வீதியாக சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் திமுக கூட்டணி கட்சிகளில் போட்டியிடும் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன். உள்ளிட்ட அதிமுக கூட்டணி கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே இரண்டு முறை தமிழ்நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்து குறிப்பாக தென் மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அது காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் மத்தியில் காங்கிரஸ் மீது நல்லெண்ணத்தையும், ஈர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி  நெருங்கி வருவதால், தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள, வரும் 28ஆம் தேதி ராகுல் காந்தி சென்னை வர உள்ளார்.  28 ஆம் தேதி காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அங்கிருந்து வேளச்சேரியில் பிரச்சாரத்தை தொடங்க உள்ளார். வேளச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன் மவுலானா வை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். 

அவருடன் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட தலைவர்களும் உடன் செல்ல உள்ளனர்.  ராகுல்காந்தியின் சுற்றுப்பயண விவரம், மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. அதேபோல அன்று மாலை திமுக, அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில்  சேலத்தில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். அங்கு திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் பங்கேற்று அவர் சிறப்புரையாற்றுகிறார். அதேபோல தமிழக பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி வரும் 30 ஆம் தேதி  தமிழகம் வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

click me!