‘2019 பொதுத் தேர்தலில், ராகுல் சவாலாக இருப்பார்’.... சிவசேனா மீண்டும் பாராட்டு

First Published Dec 25, 2017, 8:40 PM IST
Highlights
Rahul Gandhi will be a good leader....samna


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சிவசேனா கட்சி மீண்டும் புகழாரம் சூட்டி உள்ளது. காங்கிரஸ் கட்சியை சாம்பலில் (அழிவில்) இருந்து மீட்டெடுத்த ராகுல், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் கடும் சவலாக விளங்குவார் என்று, சிவசேனா பாராட்டி உள்ளது.

மீண்டும் பாராட்டு

பா.ஜனதா கட்சியின் நீண்ட நாள் கூட்டணி கட்சியான சிவசேனா, மத்தியிலும் மகாராஷ்டிரா மாநில அரசிலும் அங்கம் வகித்து வருகிறது. இருப்பினும் சமீப காலமாக பா.ஜனதாவையும் பிரதமர் மோடியையும் அந்தக் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது.

அதே நேரத்தில் இளம் தலைவரான ராகுல் காந்தி எழுச்சி பெற்று வருவதாகவும் சிவசேனா பாராட்டி இருந்தது. இந்த நிலையில், சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியரான சஞ்சய் ராவத், சிறப்பு கட்டுரை ஒன்றில் ராகுல் காந்தியை மீண்டும் பாராட்டி இருக்கிறார். அந்த கட்டுரையில் அவர் கூறி இருப்பதாவது-

‘பப்பு’வின் எழுச்சி

‘‘குஜராத் தேர்தலில் ராகுல் காந்தியால் காங்கிரசுக்கு வெற்றி தேடித்தர முடியாமல் போய் இருக்கலாம். ஆனால், அவருடைய கட்சியை வெற்றிகரமாக எழுச்சி அடைய வைத்து இருக்கிறார்.

‘பப்பு’ (கைப்பிள்ளை) என்று, பா.ஜனதாவினால் அழைக்கப்பட்ட ராகுல், ‘வெற்றி என்றாலே ஆட்சி அதிகாரம்தான்; அதிகாரத்தை விலை கொடுத்து வாங்க முடியும்...’ என்ற கருத்தை தகர்த்துவிட்டார்.

வியர்த்து விறுவிறுக்க..

குஜராத்தில் மோடிக்கும் ராகுலுக்கும் இடையேதான் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பிரதமரையும், பா.ஜனதாவையும் வியர்த்து விறுவிறுக்கச் செய்துவிட்டார் ராகுல். ‘காங்கிரஸ் இல்லாத பாரதம்’ என்ற கனவில் இருந்த பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுத்து இருக்கிறார்.

காங்கிரசை சாம்பலில் இருந்து ராகுல் மீட்டு இருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதியுடன் கைகோர்த்த காங்கிரஸ் வெற்றி பெறத் தவறிவிட்டது. தொடர்ச்சியாக தோல்விகளையே அவர் சந்தித்து வந்தார். குஜராத் தேர்தல் அந்த தோல்விகளை உடைத்தெறிந்துவிட்டது.

வலிமையான தலைவர்

குஜராத் தேர்தலில் அவருடைய பிரசாரம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவரது பொறுப்பான அமைதியான பேச்சு, விமர்சனங்கள், அவதூறுகளை சகித்துக் கொண்டதன் மூலம் மிக வலிமையான தலைவராக ராகுல் உருவாகி இருக்கிறார்.

2019-ம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என, அமித்ஷா சபதம் ஏற்று இருந்தார். குஜராத்தில் 150 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றி பெற்றால் வெற்றி விழா கொண்டாட்டங்கள் நடைபெறாது என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

சவாலாக இருப்பார்

ஆனால், பா.ஜனதா 100 தொகுதிகளுக்கும் குறைவாகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் 2019 பொதுத் தேர்தலலில் ராகுல் சவாலாக விளங்குவார் என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

நான் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர் அல்ல. ஆனால், வலுவான எதிர்க்கட்சிகள் ராகுலுக்குப் பின்னால் அணிவகுத்தால் அதை நாங்கள் வரவேற்போம்’’.

இவ்வாறு கட்டுரையில் அவர் கூறி இருக்கிறார்.

காங்கிரஸ் வரவேற்பு

சிவசேனாவின் மாறி வரும் நிலைப்பாட்டை வரவேற்று இருக்கும் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் கட்சி, ‘‘ பா.ஜனதாவின் பிளவுபடுத்தும் அரசியலுக்கு மாறாக, ராகுல் காந்தியின் ஆக்கபூர்வமான தலைமையை மக்களும் அரசியல் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் உணர்ந்து கொண்டிருப்பதாக கூறி இருக்கிறது.

click me!